கொரோனா தடையை மீறி மெரினா கடற்கரைக்கு வந்த காதலர்கள் விரட்டியடிப்பு

சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மெரினா கடற்கரைக்கு வந்த காதலர்களை போலீசார் விரட்டியடித்தனர். கொரோனா பரவலை தடுக்க சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைக்கு வார இறுதி நாட்களில் பொதுமக்கள் வர சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவை மீறி நேற்று வழக்கம் போல் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில் அதிகாலையில் நடைபயிற்சியில் ஈடுபடுவோர் குவிந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் நடைபயிற்சியில் ஈடுபட வந்தவர்கள் சாலையிலேயே நடைபயிற்சியில் ஈடுபட்டனர். பகல் நேரங்களில் போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி காதலர்கள் சிலர் கடற்கரை உட்புறங்களில் அமர்ந்து இருந்தனர். அவர்களை கடற்கரையில் ரோந்து பணியில் இருந்த போலீசார் விரட்டி அடித்தனர். வெளிமாவட்டங்களில் இருந்து மெரினா கடற்கரையை சுற்றி பார்க்க வந்தவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். போலீசாரின் கெடுபிடியால் நேற்று மெரினா கடற்கரை மக்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories:

>