×

கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4 ஆயிரம் ரயில் பெட்டி வார்டுகள் தயார்நிலை: தேவைப்படும் மாநிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4 ஆயிரம் ரயில் பெட்டிகளை சிறப்பு வார்டுகளாக மாற்றி ரயில்வே தயார்நிலையில் வைத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்குதல், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு கடுமையாக உள்ளது. இதனால், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் போதுமான அளவுக்கு படுக்கைகள் இல்லாமல், மருத்துவமனைகள் தவிக்கின்றன. ஒரே படுக்கையில் 2 முதல் 3 நோயாளிகளை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலமும் நடந்து கொண்டிருக்கிறது. தரையில் படுக்க வைத்தும் சிகிச்சை தரப்படுகிறது.

இப்பிரச்னையை சமாளிக்க ரயில்வே கைகொடுத்துள்ளது. கடந்தாண்டு கொரோனா முதல் அலை தாக்கிய போது, நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் போர்க்கால அடிப்படையில் கொரோனா சிறப்பு வார்டுகளை மாற்றப்பட்டன. பின்னர், கொரோனா தொற்றின் வேகம் குறைந்ததால், இவற்றால் பயன் இல்லாமல் போய் விட்டது. இதனால், பெரும்பாலான பெட்டிகள் மீண்டும் பயணிகள் ரயில்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, ரயில் பெட்டி வார்டுகளுக்கு அதிகளவில் தேவை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க, 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் கொரோனா சிறப்பு வார்டுகளாக மாற்றப்பட்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து இந்திய ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இதுவரை 4,002 பெட்டிகள், கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ரயில்வேயின் 16 மண்டலங்களிலும் இவை நிறுத்தப்பட்டுள்ளன. மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப, இந்த பெட்டிகள் வழங்கப்படும். இந்த பெட்டிகளில் நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளை தனிமைப்படுத்தும் வசதிகள் உள்ளன. மேலும், நோய் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வசதிகளும் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் தண்ணீர் வசதி, ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன,’ என கூறப்பட்டுள்ளது.

Tags : 4 thousand train box wards ready to treat corono patients: Arrangements to send to states in need
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...