பெங்களூருவில் இருந்து டெல்லி சென்ற விமானத்தின் கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் சிக்கியது: 12 பயணிகளிடம் போலீசார் விசாரணை

புதுடெல்லி: பெங்களூருவில் இருந்து டெல்லி சென்ற விமானத்தின் கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் சிக்கியது குறித்து 12 பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு (பெங்களூரு - டெல்லி விமானம்) 170 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஐ5-741 என்ற விமானம் நேற்று காலை புறப்பட்டது. விமானம் டெல்லியில் தரையிறங்கும் முன்பாக வானில் பறந்தபோது, விமானத்தின் கழிப்பறையில் ஒரு மர்ம கடிதம் கிடைத்தது. அதில், ‘டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (ஐஜிஐ விமான நிலையம்) குண்டு வெடிக்கும்; ெபங்களூவிலிருந்து டெல்லிக்கு வரும் இந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. விமானமானது டெல்லி விமான நிலையத்தை அடைந்தவுடன் அந்த வெடிகுண்டு வெடிக்கும்’ என்று எழுதப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம கடிதம் குறித்து தெரிவித்தனர். அதையடுத்து உஷாரான அதிகாரிகள் ெடல்லி ஐஜிஐ விமான நிலையத்தில் விமானத்தை பாதுகாப்பாக இறக்கினர். இருந்தும் வெடிகுண்டு அச்சத்தால் விமான நிலையத்தின் காலி இடத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு குழு சம்பவ இடத்திற்கு வந்து விமானத்தை முழுமையாக சோதனையை நடத்தியது. ஆனால் அங்கு வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், பயணிகளும், அதிகாரிகளும் நிம்மதியடைந்தனர். இருப்பினும், இந்த மர்ம கடிதம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த கடிதத்தை எழுதியது யார் என்பதை அறிய சுமார் 12 பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், விமானிகள், பயணிகளின் கையெழுத்து பெறப்பட்டது. கடிதத்தின் கையெழுத்துடன் மர்ம கடிதத்தின் கையெழுத்திற்கு பொருந்தி வருகிறதா? என்பதற்காக கையெழுத்து மாதிரிகள் பெறப்பட்டன. மர்ம வெடிகுண்டு கடித சம்பவம், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>