திருப்பதி கோயிலுக்கு சென்றபோது மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.50,000 உரியவரிடம் ஒப்படைப்பு: போலீஸ்காரருக்கு பாராட்டு

திருவள்ளூர்: திருப்பதி கோயிலுக்கு சென்றபோது மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட 50 ஆயிரம் ரூபாயை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்காரருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் சங்கர் (49). இவர் திருவள்ளூரில் உள்ள காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றுகிறார். இவர் தனது குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு செல்வதற்காக இன்று காலை திருவள்ளூருக்கு மின்சார ரயிலில் வந்தார். பின்னர் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கி திருப்பதி செல்வதற்காக கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்கு காத்திருந்தார்.

அப்போது குடும்பத்தினர் கொண்டுவந்து வந்திருந்த அனைத்து பைகளை சரிபார்த்தபோது ரூ.50 ஆயிரம் வைத்திருந்த பையை காணவில்லை என்றதும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பதற்றம் அடைந்த அவர்கள் ரயில் நிலையம் முழுவதும் தேடியும் பணம் கிடைக்கவில்ைல. இதுகுறித்து சங்கர், திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து அனைத்து ரயில் நிலையங்களுக்கு போலீசார் தகவல் கொடுத்து விசாரிக்க உத்தரவிட்டனர். அப்போது நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர், ஜனார்த்தனன் தனக்கு கிடைத்த தகவல்படி, அங்கு வந்த மின்சார ரயிலில் ஏறி சோதனை நடத்தினார்.

அப்போது பயணி சங்கர் பயணம் செய்த பெட்டியில் 50 ஆயிரம் ரூபாய் இருந்த பை அப்படியே இருந்தது. பணத்தை கண்டுபிடித்து கொடுத்த போலீஸ்காரர் ஜனார்த்தனத்தை ரயில்வே போலீசாரும் அதிகாரிகளும் பாராட்டினர்.

Related Stories:

>