சிட்லப்பாக்கம் மத்திய அரசு சேமிப்பு கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்

தாம்பரம்: தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தில் 17 சேமிப்பு கிடங்குகள் உள்ளன. 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கிடங்குகளில் சென்னை புறநகர் பகுதிகளுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு மாதாமாதம் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்கள் சார்பில் அவர்களது தயாரிப்பு பொருட்களை இருப்பு வைத்து சிறிய கடைகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் வீட்டு உபயோக பொருட்களின் கிடங்கும் இங்கு உள்ளது.

இந்த கிடங்குகளில் சுமை தூக்கும் தொழிலாளர்களாக 150க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். கிடங்குக்கு வரும் பொருட்களை ஏற்றி இறக்க ஒரு மூட்டைக்கு 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை இவர்களுக்கு கூலி வழங்கப்படுகிறது. இதனிடையே, கிடங்கில் உள்ள இருப்புகளை ஏற்றி, இறக்க வெளியாட்களை பயன்படுத்த நிர்வாகம் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாரிகளை கண்டித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சமாதானம் பேச வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சிட்லப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ‘‘வெளியாட்களை வைத்து தொழில் செய்தால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து போலீசார் முன்னிலையில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இருந்தபோதிலும் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் சிட்லப்பாக்கத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது. இதுகுறித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘இந்த தொழிலை விட்டால் எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. வெளியாட்களை வேலையில் அமர்த்தினால் ஊழியர்களை திரட்டி பெரிய அளவில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர்.

Related Stories:

More
>