×

ஆம்பூர் அருகே 5 ஏக்கர் நிலத்தில் உழைப்பு: இயற்கை விவசாயத்தில் கலக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்..! ஆன்லைன் மூலம் செயலி உருவாக்கி காய்கறிகள் விற்பனை

ஆம்பூர்: ஆம்பூர் அருகே இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு கலக்கி வரும் சாப்ட்வேர் இன்ஜினியர், விளையும் காய்கறிகளை பிரத்யேக ஆப் மூலம் விற்று அசத்தி வருகிறார்.  ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு வழங்கி விவசாயி மண்டி  என்ற ஆன்லைன் மூலம்  செயலி தொடங்கி விற்பனை செய்து வருகிறார். வேலூர் மாவட்டம்,  பேரணாம்பட்டு தாலுகா  பாலூர் ஊராட்சியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(65), விவசாயி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களது இளைய மகனான  திருமால் (35) ஆம்பூரில் உள்ள அரசு நிதியுதவி இந்து மேனிலைப்பள்ளியில் தனது பள்ளிபடிப்பை படித்தார். பின்னர், ஆம்பூர் அடுத்த சோலூரில் இயங்கி வரும் தனியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தார்.

தொடர்ந்து வாணியம்பாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியல் படித்த திருமால் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்தார்.  கடந்த 2016ல் விவசாயத்தின் மீதான தனது விருப்பத்தை விடுத்து வேறு பணி செய்து வருவதாக உணர்ந்த திருமால் மீண்டும் தனது சொந்த கிராமத்திற்கு திரும்பினார். தனது விருப்பத்தை மனைவி சுரேகா மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்த நிலையில் அனைவரும் ஆர்வத்துடன் அவருக்கு துணை நின்றனர்.  இவர் தனது தந்தை ராஜமாணிக்கம் உடன் இணைந்து தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் மற்றும் ஏற்கனவே குத்தகை எடுத்து விவசாயம் செய்து வரும் 5 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய துவங்கினார்.

தனது குடும்பத்தினர் ஒத்துழைப்புடனும், அப்பகுதி விவசாயிகள் ஆலோசனையின் பேரில் இவர் இயற்கை முறையிலான  நாட்டு வகை காய்கறிகளை பயிரிட்டு வளர்த்து வருகிறார். இதில் நாட்டு கத்திரிக்காய், நாட்டுத்தக்காளி, பச்சைமிளகாய், நூக்கல், முள்ளங்கி, நாட்டு மக்காச்சோளம், முருங்கைக்காய், சுரைக்காய், பாகற்காய், அவரைக்காய், பீர்க்கங்காய், நாட்டு பப்பாளி பழம், கொத்தமல்லி, கருவேப்பிலை மற்றும் கீரை வகைகள் உள்ளிட்டவைகளை பயிரிட்டு வளர்த்து வருகிறார். இதற்கு உரமாக இயற்கை உரங்களை பயன்படுத்தி வருவதால் விளைச்சல் மிகுந்து காணப்படுவதுடன் காய்கறிகள் மிகுந்த சுவையுடனும், தரமாக இருப்பதாகவும் அப்பகுதியினர் வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து திருமால் கூறியதாவது: இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் தற்போது பல்வேறு வித காய்கறிகளை பயிரிட்டு வருகிறோம்.

இதற்காக இயற்கை உரமாக வேப்பம் புண்ணாக்கு, இஞ்சி, பூண்டு,  பச்சை மிளகாய், ஆகியவை ஒன்றாக அரைத்து மாட்டு கோமியத்தில்  தண்ணீரில் ஒரு லிட்டர் கலந்து பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தி வருகிறேன். தற்போது நாளொன்றுக்கு 500 கிலோ தக்காளியை அறுவடை செய்து விற்று வருகிறேன். மேலும், இவற்றை  வெளி சந்தையில் விற்பனை செய்தால் போக்குவரத்து செலவு, இடைத்தரகர் செலவு, கூலி ஆட்கள் செலவு என எனக்கு போதுமான வருமானம் கிடைக்கவில்லை. ஆனாலும், கடைகளில் நாங்கள் விற்கும் விலையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு விலையில் காய்கறிகள் விற்கப்படுகின்றன. லாபம் குறைந்த அளவில் வந்தாலும் பொதுமக்கள் நேரடியாக பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் எனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஆலோசித்தேன்.

இன்றைய நவீன முறையை பயன்படுத்தி ஒரு புதிய ஆப்பை உருவாக்கி நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யலாம் என திட்டமிட்டு அதற்கான புதிய ஆப்பை உருவாக்கி உள்ளேன். மேலும், எங்களது ஊரில் ஒரு ரீடெய்ல் கடையை திறந்து விற்பனை செய்து வருகிறேன்.படித்த கல்வியுடன் இயற்கை விவசாயத்தை இணைத்து உருவாக்கிய இந்த ஆப்பை பலர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதன் வாயிலாக ஆர்டர் செய்து  ஆம்பூர், பேரணாம்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து நேரடியாக வந்து காய்கறிகளை பெற்று செல்கின்றனர். மேலும், சொந்தமாக 5 பசுமாடுகளை வளர்த்து வருவதால்  இதன் மூலம் கிடைக்கக்கூடிய பால் விற்பனை செய்தும், மாடுகள் இடும் சாணம், கோமியம்  ஆகியவற்றை  எருவாக பயன்படுத்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

படித்த கல்வி வீணாகாமல் இன்றைய நவீன உலகத்திற்கு இயற்கை உணவளிக்கும் வகையில் செயல்படும் திருமால் அப்பகுதியில் உள்ளவர்களிடம் மிக சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளார். இயற்கை விவசாயத்தை சிறப்பாக செய்ய இளைஞர்கள் ஒவ்வொருவரும் முன் வரவேண்டும். அத்தகைய உணர்வுடன் வருவோருக்கு சிறப்பான ஆலோசனை வழங்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கற்கும் கல்வி வாழ்க்கைக்கு, வாழ்க்கை கல்வி வளத்திற்கு என்பதற்கு ஏற்றார் போல் இன்றைய இளைய தலைமுறையில் திருமால் ஒரு பானையில் உள்ள ஒரு சோறு. இன்னும் எத்தனையோ இளைஞர்கள் இத்தகைய எண்ணத்துடன் முன்னேற துடிக்கின்றனர். அவர்களை ஆர்வத்துடன் வரவேற்பதுதான் நமது எதிர்கால நல்வாழ்விற்கான விதை. இன்று விதைப்போம். ஏனெனில் உண்டி கொடுத்தோ உயிர் கொடுத்தோர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக இயற்கை விவசாயி திருமால் தக்காளி கிலோ ₹1க்கு விற்பனை செய்து வருகிறார். தொடர்ந்து தக்காளி விலை ஏற்றத்துக்கு ஏற்ப 3ல் ஒரு பங்கு விலை கிடைத்தால் போதுமானது என்கிறார். இதேபோல் அனைத்து காய்கறிகளும் கடைகள் மற்றும் மார்க்கெட் விலையைவிட 3ல் ஒரு பங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags : Ambur , Labor on 5 acres of land near Ambur: Software engineer mixing in natural agriculture ..! Processor maker selling vegetables online
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...