தஞ்சை அருகே மணல் கடத்தல் தகராறில் பாஜ பெண் நிர்வாகி வீடு சூறை: அதிமுக பிரமுகர் உள்பட 12 பேர் கைது

தஞ்சை: தஞ்சை அருகே கள்ளப்பெரம்பூர் காளியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் சூரியகுமார். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி ஆசைக்கனி(50). கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக சார்பில் நின்று தோல்வி அடைந்தார். அதே பகுதி அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மோகன்தாசுக்கு சீட்டு கிடைக்கவில்லை. இதனால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ஆசைக்கனி சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தார். தற்போது பா.ஜ.க. தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள வெண்ணாற்றில் மணல் கடத்தி வந்த லாரிகளை ஆசைக்கனி மற்றும் அவரது சகோதரர் செந்தில் உள்ளிட்டோர் மறித்தனர். மணல் ஏற்றி வந்தவர்களுக்கு ஆதரவாக மோகன்தாஸ் பேசியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அன்று இரவு ஆசைக்கனி வீட்டை மர்ம நபர்கள் தாக்கினர்.  வீட்டின் முன்பக்க கண்ணாடிகள், பைக் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு அவர்கள் தப்பிவிட்டனர். அப்போது ஆசைக்கனி வீட்டில் இல்லை, மதுரை போயிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து அதிமுக பிரமுகர் மோகன்தாஸ் உள்ளிட்ட 12 பேரை கைது செய்தனர்.

Related Stories:

>