×

புதிய பென்ஷன் திட்டத்தில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தில், குறைந்தபட்ச பென்ஷனை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், கவுதமபுரியைச் சேர்ந்த சின்னத்துரை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நெல்லை கோட்ட தபால்துறையில் அஞ்சல் உதவியாளராக கடந்த 1.7.2005ல் பணியில் சேர்ந்தேன். கடந்த 31.1.2018ல் ஓய்வு பெற்றேன். புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்ட எனது சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது. என்னிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தில் 60 சதவீதம் ஓய்வின்போது வழங்கப்பட்டது. மீதமுள்ள 40 சதவீத பணத்தில் இருந்து மாத பென்ஷன் வழங்கப்படுகிறது.

இதில் குறைந்தபட்ச பென்ஷன் தொகை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பிடித்தம் செய்த பணத்தை பங்குசந்தையில் முதலீடு செய்து, அதிலிருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் பென்ஷன் வழங்கப்படுகிறது. ஆனால், எனக்கு மாதந்தோறும் ரூ.960தான் பென்ஷனாக  கிடைக்கிறது. இது எனது வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு புதிய பென்ஷன் திட்டத்தில் ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் தொகையை நிர்ணயிக்கவும், கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு குறையாமல் பென்ஷன் வழங்குவதை உறுதி செய்திடவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர். வக்கீல் பொற்கொடி கர்ணன் ஆஜராகி, ‘‘குறைந்த வருவாய் பிரிவினரின் வாழ்க்கையை உறுதிப்படுத்திட மத்திய அரசின் அடல் பென்ஷன் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,454 பென்ஷன் வழங்கப்படுகிறது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பென்ஷன் திட்டத்தில் கூட குறைந்தபட்ச பென்ஷன் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனுவிற்கு ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணைய துணை பொது மேலாளர், தபால் துறை செயலர், தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், முதுநிலை கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.28க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Federal Government , Case seeking minimum pension for employees under the new pension scheme: Federal Government ordered to respond
× RELATED டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த...