×

ஆரணியில் கொள்ளை போகும் கனிமவளம் 400 பேருடன் இயங்கும் மணல் கம்பெனி: அதிகாரிகள் ஆசியுடன் அரங்கேறும் அவலம்; வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கமண்டலநாகநதி ஆற்றுபடுகைகளில் 400 பேருடன் ஷிப்டு முறையில் அதிகாரிகள் ஆசியோடு மணல் கம்பெனிகள் மூலம் கனிமங்கள் கொள்ளைபோகிறது. மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்ப்பதால் தடையின்றி மணல் கொள்ளை அரங்கேறி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிவர், புரெவி புயல் காரணமாகவும், வடகிழக்கு பருவமழையின் காரணமாகவும் மாவட்டம் முழுவதும் உள்ள அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதனால் மாவட்டம் முழுவதும் பல ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து கிராமங்களிலும் உள்ள ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் நவரை பட்டத்தில் விசாயிகள் சாகுபடி செய்து, அறுவடையும் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆரணி பகுதிகளில் உள்ள கமண்டல நாகநதி, செய்யாறு, புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நிரம்பியது. இதனால் கடந்த சில மாதங்களாக ஆறுகளில் தண்ணீர் இருந்ததால், மணல் கொள்ளை முழுமையாக நிறுத்தப்பட்டது.
தற்போது, ஆறுகளில் தண்ணீர் முழுமையாக வற்றியுள்ள நிலையில், ஆரணி சுற்றுவட்டார பகுதிகளான தச்சூர், காமக்கூர், குண்ணத்தூர், எஸ்.வி.நகரம், மொழுகம்பூண்டி, விண்ணமங்கலம், வம்பலுர், மோட்டூர், மாமண்டூர், ராகுநாதபுரம், சாணார்பாளையம், அம்மாபாளையம், கீழ்நகர், மேல்சீசமங்கலம், ஆரணி டவுன் விஏகே நகர், புத்திகாமேட்டீஸ்வர் கோயில் அருகே என்று ஆரணி பகுதிகளில் உள்ள ஆறுகளில் இரவு, பகலாக அதிகாரிகள் ஆசியுடன் ஷிப்டு முறையில் மணல் கம்பெனியே நடந்து வருகிறது.

பட்டப்பகலில் ஆற்றுப்படுகைகளில் 400க்கும் மேற்பட்ட நபர்கள் மூலம் ஆறுகளில் ஜல்லடை போட்டு ஜலித்து வைத்து இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் லாரி, டிராக்டர்கள், மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது. மணல் மாபியாக்கள், ஆறுகளை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள முட்புதர்கள், சுடுகாட்டு பாதைகள், விவசாய நிலங்களையும் வாடகைக்கு எடுத்து மாட்டு வண்டி, டிராக்டர்களில் மணல் கடத்திச்சென்று இருப்பு வைத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பிற மாவட்டங்களுக்கும் சப்ளை செய்து கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர்.

இதனை தடுக்க வேண்டிய காவல்துறை, வருவாய்த்துறை, கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை, இவைகளை ஒட்டுமொத்தமாக கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாவட்ட நிர்வாகம் என்று யாரும் கண்டுகொள்ளாததால் தடையின்றி மணல் கொள்ளை அரங்கேறி வருகிறது. எனவே கனிமவளம் கொள்ளை போவதை தடுக்க இனியாவது மாவட்ட நிர்வாகம் விழித்துக்கொண்டு நடவடிக்கை எடுத்தால்தான் மிஞ்சியுள்ள விவசாயிகளாவது பயிர்செய்ய முடியும் என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதேபோல், மணல் திருட்டில் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள், டிப்பர் லாரிகள் நம்பர் பிளேட், பர்மிட் இல்லாமல் திருட்டு வண்டிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால். வாகனங்களை  பராமரிப்பின்றி இயக்குவதால் நாளுக்கு நாள் உயிர் சேதங்கள் அதிகரித்து வருகிறது.

* துணைபோகும் கருப்பு ஆடுகள்
ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபடும் மாபியாக்கள் ஆரணி தாலுகா அலுவலகம், டிஎஸ்பி அலுவலம், தாலுகா மற்றும் நகர காவல்நிலையம் அருகில் உள்ள கடைகளில் முகாமிட்டு மணல் ரெய்டு செல்லும் போலீசார், வருவாய்துறை அதிகாரிகளின் வாகனங்களை இரவு, பகல் என 24 மணி நேரமும் நோட்டமிடுகின்றனர். காவல்துறை, வருவாய்த்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் துணையோடு தகவல்களை பெற்று மணல் கடத்தல் ஜோராக நடக்கிறது. எனவே, காவல்நிலையம், தாலுகா அலுவலகம் அருகே சம்மந்தமில்லாமல் பல மணிநேரம் காத்திருக்கும் நபர்களை அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுத்தாலே, மணல் கடத்தல் தடுக்க ரோந்து செல்லும் அதிகாரிகள் குறித்த தகவல் மாபியாக்களுக்கு தெரியாது என்கின்றனர் பொதுமக்கள்.

Tags : Sand Company ,Arani , Sand Company with 400 people to plunder mineral resources in Arani: It is a pity that the authorities stage with blessings; Fun watching district administration
× RELATED 150 கிலோ மிளகாய் கொண்டு மகா...