×

ஓட்டு எண்ணிக்கை ஏஜென்டுகளை மண்டபத்தில் தங்க வைக்க வேண்டும்: அதிமுகவினருக்கு முதல்வர் உத்தரவு

சேலம்: சேலம் மாநகர், புறநகர் மாவட்ட பகுதி, பேரூர், ஒன்றிய செயலாளர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தற்போதைய எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்திற்கு முதல்வரும், புறநகர் மாவட்ட செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்திருந்தார். இதன்படி நேற்று மாலை, ஓமலூர் கட்சி அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: ஓட்டு எண்ணிக்கை வருகிற 2ம்தேதி நடக்கிறது. ஏஜென்டுகள் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, அங்கிருந்து வெளியே வரக்கூடாது. கடைசி வரை உள்ளே இருக்க வேண்டும். நான் சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது, கடைசி 2 பெட்டியில் தான் அதிக வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றேன். எனவே, கடைசி வரை அறையில் இருந்து வெளியே வரக்கூடாது. வேட்பாளரின் உறவினர் ஒருவரை ஏஜென்டாக நியமியுங்கள். அவர்கள் தான் கடைசி வரை வெளியே வரமாட்டார்கள்.

அதே நேரத்தில் ஏஜென்டுகளை 1ம்தேதி மாலை 5 மணிக்கு, மண்டபத்திற்கு அழைத்து சென்றுவிட வேண்டும். இரவில் அங்கு தங்க வைத்து, அவர்களை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும். மறுநாள் காலை 5 மணிக்கு, அவர்களை தயார் செய்து ஓட்டு எண்ணும் மையத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். தற்போது கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. இந்த நோய்க்கு எனது நெருங்கிய நண்பர்கள் சிலரை இழந்துவிட்டேன். எனவே, நீங்கள் மாஸ்க் அணியாமல் வெளியே செல்லவேண்டாம். கை குலுக்க வேண்டாம். வெளியே சாப்பிட வேண்டாம். ஒவ்வொருவரின் உயிரும் நமக்கு முக்கியம் என்பதை நீங்கள் உணர வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார். வீரபாண்டி எம்எல்ஏ மனோன்மணி, கெங்கவல்லி மருதமுத்து ஆகியோர் கூட்டத்தை புறக்கணித்தனர்.

Tags : Ballot counting agents should stay in the hall: Chief Minister orders to AIADMK
× RELATED ரூ.4 கோடி விவகாரம்: நயினார்...