×

கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரிப்பு எதிரொலி: காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் உடற்திறன் தேர்வு ஒத்திவைப்பு: சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பு

சென்னை: கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரிப்பை தொடர்ந்து வருகிற 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற இருந்த காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் பதவிக்கான உடற்திறன் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (டிஎன்யுஎஸ்ஆர்பி) இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்புத்துறை  காவலர் என மொத்தம் 10,906 காலிப் பணியிடங்களுக்கான உடற்திறன் தேர்வுகள் வரும் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவித்திருந்தது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 60,000 பேர் பங்கேற்க இருந்தனர். கொரோனாவின் 2வது அலை மிக தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இத்தேர்வை நடத்துவது  என்பது கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கவேஅதிக வாய்ப்பு உள்ளது. தேர்வை நடத்தினால் தேர்வர்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். எனவே, இந்த நேரத்தில் தேர்வை நடத்தக்கூடாது. 2ம் அலையின் தீவிரத்தன்மை குறையும் வரை தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.   

மேலும் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உடற்திறன் தேர்வுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் வருகிற 21ம் தேதி தொடங்க இருந்த உடற்திறன் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் 2020ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்வு தொடர்பாக 21ம் தேதி முதல் நடத்தப்பட உள்ள சான்றிதழ் சரிபார்த்தல், உடல்கூறு அளத்தல், உடற் தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் போட்டி தேர்வுகள் சில நிர்வாக காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது. இத்தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மின்சார வாரிய தேர்வும் ஒத்திவைப்பு
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், உதவி பொறியாளர் / மின்னியல் 400 பதவிகளுக்கும் உதவி பொறியாளர் / இயந்திரவியல் 125 பதவிகளுக்கும் மற்றும் உதவி பொறியாளர் / கட்டிடவியல் 75 பதவிகளுக்கும் வருகிற 24, 25 மற்றும் மே 1, 2ம் தேதி ஆகிய நாட்களிலும், கடந்த ஜனவரி 8ம் தேதி விண்ணப்பங்கள் பெறப்பட்ட  இளநிலை உதவியாளர் / கணக்கு 500 பதவிகளுக்கும் 8.5.2021, 9.5.2021, 15.5.2021 மற்றும் 16.5.2021 ஆகிய நாட்களிலும் கணினி வழி தேர்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டது.  

தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மேற்கண்ட பதவிகளுக்கு 24.4.2021 முதல் 16.5.2021 வரை மேற்காணும் தேதிகளில் உத்தேசிக்கப்பட்ட கணினி வழி எழுத்து தேர்வு  ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் கணினி வழி எழுத்து தேர்வு நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tangedco.gov.in என்ற இணையத்தையும் அவரவர் மின்னஞ்சல் முகவரியையும் அவ்வப்பொழுது பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.



Tags : Corona 2nd Wave Impact Increase Echo: Guard, Prison Guard, Firefighter Fitness Exam Postponed: Uniform Selection Board Announcement
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...