கொரோனா பாதித்தவர்களுக்கான உடற்பரிசோதனை மையத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு: தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்

சென்னை: சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுக்கான முதற்கட்ட உடற்பரிசோதனை மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை:

கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப, தொற்று பாதித்த நபர்கள் அவர்களின் வீடுகள், கோவிட் பாதுகாப்பு மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதித்தவர்களுக்கு முதல்நிலை உடற்பரிசோதனை செய்வதற்காக 12 முதல்நிலை உடற்பரிசோதனை மையங்கள்  உள்ளன.

இந்த முதற்கட்ட உடற்பரிசோதனை மையத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு ரத்த பரிசோதனை, எக்ஸ்-ரே, சுவாசத்தில் ஆக்சிஜன் அளவு மற்றும் ரத்தக் கொதிப்பு போன்ற பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.  வளசரவாக்கம் மண்டலம், வார்டு-154க்குட்பட்ட ராமாபுரம் ஹூசைனி உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுக்கான முதற்கட்ட உடற்பரிசோதனை மையத்தை ஆணையர் பிரகாஷ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஆணையர் பிரகாஷ் வளசரவாக்கம் மண்டலம், வார்டு-151க்கு உட்பட்ட போரூரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியினை ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 16 நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகள் மற்றும் 24 மணிநேரமும் இயங்கும் 3 மகப்பேறு மருத்துவமனைகள் உள்ளன.

இந்த நகர்ப்புற சமுதாய  நல மருத்துவமனைகளில் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோய் கண்டறிதல், பொது அறுவை சிகிச்சைகள், சாதாரண மகப்பேறு மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சைகள் போன்ற பல்வேறு சிகிச்சைகளும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆலோசனைகள் வழங்க ஆலோசனை மையங்களும் உள்ளன. பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான சிகிச்சைகளை பெற்று பயன்பெறலாம். ஆய்வின்போது இணை ஆணையர் (சுகாதாரம், பொறுப்பு) ஆல்பி ஜான் வர்கீஷ், மாநகர நல அலுவலர்  எம்.ஜெகதீசன், மண்டல அலுவலர் ராஜசேகர், மண்டல நல அலுவலர் டாக்டர் ராஜா, மருத்துவ அலுவலர் டாக்டர் ராணி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>