×

மேற்கு வங்கத்தில் நடந்த 5ம் கட்ட தேர்தலில் 78% வாக்குப்பதிவு: சில இடங்களில் வன்முறை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நேற்று நடந்த 5ம் கட்ட தேர்தலில், ஒரு சில இடங்களில் வன்முறைகள் நடந்தன. இத்தேர்தலில் 78.36 சதவீத வாக்குகள் பதிவாகின. மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே 4 கட்ட தேர்தல்கள் முடிக்கப்பட்டு விட்டன. 4ம் கட்ட தேர்தலில் வன்முறை ஏற்பட்டதால் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், 45 தொகுதிகளில் நேற்று பலத்த பாதுகாப்புடன் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில், ஒரு சில தொகுதிகளில் சிறிய அளவில் வன்முறைகள் நடந்தன. பாஜ- திரிணாமுல் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், பலர் காயம் அடைந்தனர்.பிதன் நகரில் பாஜ - திரிணாமுல் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு செல்லவிடாமல் தடுப்பதாக ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டியதுடன் கற்கள், செங்கல் போன்றவற்றையும் வீசிக் கொண்டனர். மத்திய பாதுகாப்பு படை உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது. இதேபோல், சிலிகுரியில் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் திரிணாமுல் தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர். நதியா மாவட்டத்தின் சாந்திப்பூர் பகுதியிலும், வடக்கு 24 பர்கானஸ், பீஜ்பூர் பகுதியிலும் வன்முறை ஏற்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. மினகா தொகுதியில் பாஜ.வின் பூத் ஏஜென்ட் கடத்தப்பட்டு விட்டதாக புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டு அடங்கியது. இத்தேர்தலில் மொத்தம் 78.36 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டது.  

* ஜாங்கிப்பூர் தொகுதியில் தேர்தல் நிறுத்திவைப்பு
முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜாங்கிப்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் 26ம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. இங்கு, ஆர்எஸ்பி கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரதீப் குமார் நந்தி (73), கொரோனா தொற்று காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இதையடுத்து, நேற்று இத்தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு புதிய வேட்பாளரை அறிவிக்க ஆர்எஸ்பிக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அது வேட்பாளரை அறிவித்ததும், இத்தொகுதி தேர்தலுக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்தது.

* மம்தா ஆடியோ பற்றி விசாரிக்க வேண்டும்
கடந்த ஏப்ரல் 10ம் தேதி சிதல்குச்சி தொகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியானார்கள். இவர்களின் சடலத்தை வைத்து ஊர்வலம் நடத்தி மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இத்தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரிடம் மம்தா பேசியது போன்ற ஆடியோ வெளியாகி உள்ளது. இது பற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜ நேற்று மனு அளித்தது.

Tags : West ,Bengal elections , 78% turnout in 5th phase of West Bengal elections: Violence in some places
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் பத்துகானிக்கு...