×

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை: 20 முதல் 21ம் தேதி வரை 22 மாவட்டங்களில் 3 டிகிரி வரை வெயில் அதிகமாக கொளுத்தும்

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலை ஓட்டிய மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும், 20ம் தேதி முதல் 21ம் தேதி வரை 2 நாட்கள் 22 மாவட்டங்களில் 3 டிகிரி வரை வெயில் அதிகமாக கொளுத்தும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. பிற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் நடமுடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. அந்த அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தென்மாவட்டங்களில் நல்ல மழையும் அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் 21ம் தேதி வரை 4 நாட்கள் லேசான மழை பெய்யக்கூடும். மேலும் 20ம் தேதி முதல் 21ம் தேதி வரை 22 மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் கூறியதாவது: மகாராஷ்டிரா விதர்பா முதல் உள் தமிழகம் வரை 1.5 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி; கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் 2.1 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 18ம் தேதி(இன்று) முதல் 19ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய ேலசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.20ம் தேதி முதல் 21ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை ஓட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையை நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேமூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தப்பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அதே நேரத்தில் 20ம் தேதி முதல் 21ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஓரிரு இடங்களில் அதிகப்பட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக விருதுநகர், வில்லிப்புத்தூர் தலா 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. ஓகேனக்கல், பென்னாகரத்தில் தலா 5 செ.மீ,  திருத்துறைப்பூண்டி, சாத்தூர், இரணியல், திருச்சுழி தலா 3 செ.மீ, அருப்புக்கோட்டை, பேரூர், எடப்பாடி, ஈரோடு, திருபுவனம், வத்திராயிருப்பு, ராதாபுரத்தில் தலா 2 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Western Ghats , Rainfall for 4 days from today in the districts adjoining the Western Ghats: From 20 to 21, 22 districts will experience high temperatures of up to 3 degrees.
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...