மாமல்லபுரத்தில் தேக்கு மரத்தில் வடிவமைக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி மரச்சிற்பம்: உத்தரபிரதேசம் சென்றது

சென்னை: மாமல்லபுரம் அருகே 3 அடி உயரத்தில் தேக்கு மரத்தில் வடிவமைக்கப்பட்ட அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி மரச்சிற்பம், அயோத்தி ராமர் கோயிலுக்கு லாரி மூலம் எடுத்து செல்லப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 161 அடி உயரத்தில் 340 தூண்களுடன் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இக்கோயிலில் வைப்பதற்காக தேக்கு மரத்திலான மாதிரி சிற்பம் செதுக்க மாமல்லபுரம் அடுத்த பெருமாளேரியில் உள்ள மானசா மரச்சிற்பக்கலை கூடத்தில் ராம ஜென்ம தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினர் பரிந்துரைத்துனர். பின்னர் தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற மரச்சிற்ப கலைஞர் ரமேஷ் தலைமையில் 25க்கும் மேற்பட்ட மரச்சிற்ப கலைஞர்கள் கடந்த 6 மாதங்களாக தேக்கு மரத்தில் 3 அடி உயரத்தில் 3 அடுக்குகளுடன் 340 தூண்களுடன் தேக்கு மரத்தில் அயோத்தி ராமர் கோயிலின் மாதிரி மரச்சிற்பத்தை ராமர் கருவறையுடன் செதுக்கி உள்ளனர்.

தற்போது அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை நேரில் பார்த்த ஒரு உணர்வு மிக்க வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த மாதிரி மரச்சிற்பம் காட்சியளிக்கிறது. மேலும் இதனை செதுக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில், ராமர் கோயில் மாதிரி மரச்சிற்பம் ஒரு லாரி மூலம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு 21ம் தேதி ராமருக்கு உகந்த விசேஷ நாளான ராமநவமி அன்று, ராம பக்தர்கள் முன்னிலையில் சாதுக்கல், வைணவ பட்டர்கள் மூலம் சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு செய்து கோயில் வளாகத்தில் இந்த மரச்சிற்பம் வைக்கப்பட உள்ளது. வரும் ராமநவமி முதல் அங்கு வரும் பக்தர்களுக்கு இந்த மாதிரி மரச்சிற்பத்தை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக மரச்சிற்பக்கலைஞர் ரமேஷ் தெரிவித்தார்.

Related Stories: