×

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயிலை இயக்கும் திட்டம் இல்லை: ரயில்வே வாரியத் தலைவர் பேட்டி

புதுடெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயிலை இயக்கும் திட்டம் ஏதுமில்லை என்று ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்தார். நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக்கின்றது. இங்கு தினசரி 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை கொரோனா நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதனால், கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

ஊரடங்கு அமலுக்கு வந்ததால் வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து கிளம்பினர். இதேேபால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலாகி உள்ளது. போக்குவதரத்து கட்டுப்பாடு, இ-பாஸ் முறைகள் சில மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ளதால், தொலைதூர, சிறப்பு ரயில் சேவை நிறுத்தப்படும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இந்திய ரயில்வே சார்பில் தற்போது நாளொன்றுக்கு 1,490 விரைவு ரயில்களும், 5,397 புறநகர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ரயில்வே வாரியத் தலைவர் சுனிதா சர்மா கூறுகையில், ‘ரயில் சேவையை நிறுத்துமாறு எந்த மாநிலமும் ரயில்வேயை கேட்கவில்லை. ஆனால், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலம் குறித்து கவலை தெரிவித்துள்ள மாநிலங்களில், அந்த இடங்களில்  பயணிகளுக்கு கட்டாய சோதனைகளை நடத்த கேட்டுக் கொண்டுள்ளன. ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு வலைத்தளம் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா வழிகாட்டுதல் குறித்து இ-டிக்கெட் வலைத்தளத்தில் அனைத்து தகவல்களையும் ரயில்வே அளித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள் வெப்ப ஸ்கேனிங் செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் ஏற்பாடுகள் ஏதுமில்லை. ஆனால், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். பயணிகளின் நெரிசலை தடுக்க பிளாட்பார்ம் டிக்கெட்டுகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Railway Board , No plan to run special train for migrant workers: Interview with Railway Board Chairman
× RELATED தென்மாவட்ட மக்களின் கனவு நிறைவேறியது.....