தென்ஆப்பிரிக்க அணியில் மீண்டும் டிவில்லியர்ஸ்!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று 3 வருடங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் ஏபி டிவில்லியர்ஸ் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 13ஆவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 15 போட்டிகளில் களமிறங்கி 5 அரை சதங்கள் உட்பட 158.74 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 454 ரன்கள் குவித்தார். அதே அதிரடியை தற்போது நடைபெற்று வரும் 14ஆவது சீசனிலும் தொடர்ந்து வருகிறார். முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்துக் களமிறங்கிய ஆர்சிபி அணியில் டிவில்லியர்ஸ் 27 பந்துகளை எதிர்கொண்டு 48 ரன்கள் குவித்தார்.

பல மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்துவிட்டு, எடுத்த எடுப்பிலேயே அதிரடி காட்டியதை கிரிக்கெட் உலகம்  திகைப்புடன் பார்த்தது. இவரின் இந்த அதிரடி ஆட்டத்தைப் பார்த்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும், டிவிலியர்ஸ் உடனடியாக ஓய்வு அறிவிப்பை ரத்து செய்துவிட்டு அணியில் இணைய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த அணி பயிற்சியாளர் மார்க் பவுச்சர் அளித்த பேட்டியில், ஏபி டிவில்லியர்ஸுக்கு அழைப்பு விடுத்தீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த பவுச்சர் “ஆம், ஐபிஎல் 14வது சீசன் துவங்குவதற்கு முன்பே டிவில்லியர்ஸிடம் இதுகுறித்து பேசிவிட்டேன்.

அவர் இன்றுவரை உலகத்தரம் வாய்ந்த வீரராக திகழ்கிறார். டி20 லீக் போட்டிகளில் மேட்ச் வின்னராக இருக்கிறார். அவர் மீண்டும் அணியில் இணைவார் என்ற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.

Related Stories:

>