மாதவரம் சுற்றுவட்டார பகுதிகளில் பைக்குகள் திருடும் பலே கில்லாடிகள் 2 பேர் கைது; 3 வாகனம் பறிமுதல்

புழல்: சென்னை வியாசர்பாடியை அடுத்த கொடுங்கையூரை சேர்ந்தவர்  அரவிந்தன் (26). இவர்  மாதவரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் வங்கியின் கீழ் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது,  இருசக்கர வாகனம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தபோது,  இருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்வது தெரியவந்தது. அவர்களை பிடிக்க மாதவரம் உதவி கமிஷனர் அருள் சந்தோஷ் முத்து உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மாதவரம் இரட்டை ஏரி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (32), அவரது உறவினர் விஜய் (32) என்பதும், கொடுங்கையூர், மாதவரம், செங்குன்றம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடுவதில் பலே கில்லாடிகள் எனவும் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 3 திருட்டு வாகனங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More
>