×

பத்மஸ்ரீ, கலைவாணர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்

சென்னை: பத்மஸ்ரீ, கலைவாணர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். மாரடைப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் காலை 4.35 மணிக்கு உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் நடிகர் விவேக் நேற்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று முதல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை 11 மணிக்கு சுயநினைவு இல்லாத நிலையில் மருத்துவமனைக்கு விவேக் அழைத்து வரப்பட்டார். நடிகர் விவேக்குக்கு இதயத்துடிப்பு குறைந்ததால் ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சை தரப்பட்டது. கவலைக்கிடமான நிலையில் அவர் எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 24 மணி நேரம் கடந்த பிறகு தான் அவரது உடல்நிலை குறித்து கூற முடியும் என்று மருத்துவமனை தெரிவித்திருந்தது.

பிறப்பு:
தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டியில் நடிகர் விவேக் 1961-ம் ஆண்டு பிறந்தார். அவரது இயற்பெயர் விவேகானந்தன்.

கலைப் பயணம்:
சென்னை தலைமைச் செயலகத்தில் ஊழியராக தனது கலைப் பயணத்தை ஆரம்பித்தவர். இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் சின்ன கலைவாணர் விவேக். 1987-ம் ஆண்டு மனதில்  உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் விவேக் அறிமுகமானார். நடிகர் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் தொடங்கி இன்றைய நட்சத்திரங்கள் வரை விவேக் நடித்துள்ளார். புதுப்புது அர்த்தங்கள். உழைப்பாளி, வீரா, காதல் மன்னன், பிரியமானவளே உள்ளிட்ட படங்களில் விவேக் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர். நான்தான் பாலா, வெள்ளைப் பூக்கள் படங்களில் கதாநாயகனாக விவேக் நடித்துள்ளார். 2020 ம் ஆண்டு தாராள பிரபு என்ற படத்தில் நடிகர் விவேக் கடைசியாக நடத்துள்ளார். கடமை கண்ணியம் கட்டுப்பாடு, நல்வரவு, சித்திரம், இளமை இதோ இதோ படங்களை தயாரித்துள்ளார்.

விருதுகள்:
பத்மஸ்ரீ, கலைவாணர் விருது, பிலிம்பேர் விருது, சர்வதேச தமிழ்பட விருது  உள்ளிட்ட பல விருதுகளை நடிகர் விவேக் பெற்றுள்ளார். சமூக சீர்திருத்த கருத்துகளை கூறி நடித்ததால் சின்னக் கலைவாணர் என்று விவேக் அழைக்கப்பட்டவர்.  5 முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் விருதை நடிகர் விவேக் பெற்றுள்ளார். ரன், சாமி, பேரழகன் படங்களுக்கு பிலிம்பேர் விருதுகளை விவேக் பெற்றுள்ளார்.

கிரீன் கலாம் திட்டம்:

அப்துல்கலாமின் கருத்துகளை மாணவர்கள், இளைஞர்களிடம் கொண்டு செல்ல பாடுபட்டவர்.  கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடுவதை வலியுறுத்தி வந்தார்.


Tags : Padmasiri ,Artman ,Vivek ,Chennai , Many award winning actor Vivek including Padmasree, artist died at a private hospital in Chennai due to a heart attack.
× RELATED பவானியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 இளைஞர்கள் கைது