×

கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த தஞ்சை பெரிய கோயில், வேலூர் கோட்டை மூடல்: பக்தர்களுக்கு தடை

தஞ்சை: கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த தஞ்சை பெரிய கோயில், ஜெயங்கொண்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், வேலூர் கோட்டை கோயில் ஆகியவை மூடப்பட்டன. நாடு முழுவதும் கொரோனா தொற்று 2-அலை பரவி வருகிறது. அதனால், மத்திய அரசால் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் நாடுமுழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், பாரம்பரிய சின்னங்களை மே 15ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து நினைவு சின்னங்களும் ஒரு மாதத்துக்கு மூடப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதையடுத்து தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 3693 நினைவு சின்னங்கள் மூடப்படுகிறது.

இந்நிலையில், உலக பாரம்பரிய சின்னமான தஞ்சை பெரிய கோயில் நேற்று காலை மூடப்பட்டது. கோயிலின் முன்பகுதி கேட் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் கோயிலுக்குள் சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் சுவாமி தரிசனம் செய்ய காலையிலேயே அதிகளவிலான பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால் கோயில் மூடப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.பக்தர்களின்றி வழக்கம்மான பூஜைகள் நடந்தது. கும்பகோணம்: கும்பகோணம் தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயில் கேட்டும் மூடப்பட்டது. ஆனால் பூஜைகள் வழக்கம்போல் உள்ளே நடந்தது. வெள்ளிக்கிழமையான நேற்று கோயிலுக்கு வந்த பக்தர்கள் நடைமூடப்பட்டிருந்ததால் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

ஜெயங்கொண்டம்: இதேபோல் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலும் மூடப்பட்டது. ஆனால் கோயிலுக்குள் வழக்கமான பூஜைகள் நடந்தது. வேலூர் கோட்டை: வேலூர் மாவட்டத்தில் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோயில், அருங்காட்சியகம் உட்பட அனைத்தும் நேற்று முன்தினம் மாலையே மூடப்பட்டன. கோட்டையின் நுழைவு வாயில் கதவு மூடப்பட்டது. காந்தி சிலை அருகே பேரிகார்டுகள் அமைத்து தடுப்பு வேலி போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் கோட்டையின் உள்ளே செல்ல முடியாத வகையில் அங்கு தொல்லியல் துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செஞ்சி கோட்டை:  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் உள்ள ராஜகிரி கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி கோட்டையின் நுழைவுவாயிலை தொல்லியல் துறையினர் அடைத்துள்ளனர். இதனால் செஞ்சி கோட்டையை சுற்றி பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags : Tanjore Big Temple ,Vellore , Corona, the great temple of Tanjore
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...