×

சாத்தான்குளம் வழக்கை கேரளாவுக்கு மாற்றலாமா?: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தையும், மகனும் காவல் நிலையத்தில் போலீசால் அடித்து கொல்லப்பட்ட விவகாரம், தேசியளவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது, இந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பான பிரதான வழக்கு, மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தொடர் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் விளம்பரத்துக்காக தான் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், மதுரை சிறையில் எங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்பதாலும், இந்த கேரளாவுக்கு மாற்றம் செய்யும்படி கோரி சப்இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், உயிரிழந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, உச்ச நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்த இடைக்கால மனுவில், ‘எஸ்.ஐ ரகு கணேஷ் தொடந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை கேரள மாநிலத்திற்கும் மாற்ற உத்தரவிடக் கூடாது. அதற்கான அவசியமும் இல்லை,’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி போபண்ணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செல்வராணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், பாரிவேந்தன் ஆகியோர், “சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் அனைத்து முழு விவரங்களும் தமிழக அரசுக்கு தெரியும் என்பதால், இந்த வழக்கில் மாநில அரசையும் எதிர்மனுதாரராக இணைக்க வேண்டும்,’’ என்றனர். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “செல்வராணியின் இடைக்கால மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்கிறது. மேலும், தமிழக அரசும் எதிர்மனுதாரராக இணைக்கப்படுகிறது. இந்த வழக்கை கேரள மாநிலம், திருவனந்தபுரத்திற்கு மாற்றலாமா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது,’ என்றனர்.

Tags : Sathankulam ,Kerala ,Supreme Court ,Tamil Nadu government , Satankulam case, Supreme Court, order
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...