×

சாஹர் வேகத்தில் சரிந்தது பஞ்சாப்: சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

மும்பை பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார். இது ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணிக்காக அவர் களமிறங்கும் 200வது போட்டியாகும். இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பஞ்சாப் கிங்ஸ் தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் களமிறங்கினர்.

தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே மயாங்க் ஸ்டம்புகள் சிதற டக் அவுட்டாகி வெளியேற, பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. ராகுல் 5 ரன் எடுத்த நிலையில், ஜடேஜாவின் துல்லியமான த்ரோவில் பரிதாபமாக ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதிரடி வீரர் கிறிஸ் கேல் 10 ரன் எடுத்து சாஹர் வேகத்தில் ஜடேஜாவிடம் பிடிபட்டார். அடுத்து வந்த நிகோலஸ் பூரன் ரன் ஏதும் எடுக்காமல் சாஹர் வேகத்தில் தாகூர் வசம் கேட்ச் கொடுத்து வாத்து நடை போட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீபக் ஹூடா 10 ரன் எடுத்து சாஹர் பந்துவீச்சில் பலியாக, பஞ்சாப் அணி 6.2 ஓவரில் 26 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து பரிதவித்தது.

இந்த நிலையில், ஷாருக் கான் - ஜை ரிச்சர்ட்சன் ஜோடி பொறுப்புடன் விளையாடி 6வது விக்கெட்டுக்கு 31 ரன் சேர்த்தது. ரிச்சர்ட்சன் 15 ரன் எடுத்து மொயீன் அலி சுழலில் கிளீன் போல்டானார். முருகன் அஷ்வின் ஓரளவு தாக்குப்பிடிக்க, நம்பிக்கையுடன் அடித்து ஆடிய ஷாருக் கான் பஞ்சாப் ஸ்கோரை கவுரவமான நிலைக்கு உயர்த்த போராடினார். எம்.அஷ்வின் 6 ரன் எடுத்து பிராவோ வேகத்தில் டு பிளெஸ்ஸியிடம் பிடிபட்டார். அரை சதத்தை நெருங்கிய ஷாருக் 47 ரன் (36 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி, சாம் கரன் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்தது. ஷமி 9 ரன், மெரிடித் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் சாஹர் 4 ஓவரில் ஒரு மெய்டன் உள்பட 13 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். மொயீன், பிராவோ, சாம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ருதுராஜ், டு பிளெஸ்ஸி இருவரும் துரத்தலை தொடங்கினர். ருதுராஜ் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய டு பிளெஸ்ஸி பஞ்சாப் பந்துவீச்சை பதம் பார்த்தார். ருதுராஜ் 5 ரன் எடுத்து அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஹூடா வசம் பிடிபட்டார். மொயீன்அலி 46 ரன் (31 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். டு பிளெஸ்ஸி - மோயின் 2வது விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்தனர். இலக்கை நெருங்கிய நிலையில் ரெய்னா 8 ரன்னில் வெளியேற, ராயுடு கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். சூப்பர் கிங்ஸ் அணி 15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்து அபாரமாக வென்றது. டு பிளெஸ்ஸி 36 ரன் (33 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), சாம் கரன் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் முகமது ஷமி 2, அர்ஷ்தீப், எம்.அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்து 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

Tags : Punjab ,Chennai Super Kings , Chennai Super Kings, win
× RELATED ஐபிஎல்: பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்