அயோத்தியில் உருவாகி வரும் பிரமாண்டம்: ராமர் கோயிலுக்கு நன்கொடை: 22 கோடி செக் பவுன்ஸ்: இந்து அமைப்புகள் அதிர்ச்சி

புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை வழங்கப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள காசோலைகள் பணமின்றி திரும்பி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அயோத்தியில் பிரமாண்டமான வகையில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை, ‘ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை’ என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இது, கோயில் கட்டுமான பணிகள் முழுவதும் மக்களின் பங்களிப்பில் மட்டுமே கட்டப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து, கோயில் கட்டுமான பணிக்காக உலகம் முழுவதிலும் நன்கொடை திரட்டப்பட்டது.

கடந்த சில மாதங்களாக திரட்டப்பட்டு வந்த இந்த நன்கொடையின் மூலம், ரூ.2 ஆயிரம் கோடி கிடைத்து இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், நன்கொடையாக வழங்கப்பட்ட ரூ.22 கோடி மதிப்புள்ள 15 ஆயிரம் காசோலைகள், வங்கியில் பணமில்லை, தொழில்நுட்ப சர்ச்சை உட்பட பல்ேவறு காரணங்களால் திரும்பி வந்துள்ளன. இதனால், நன்கொடை வசூலித்த இயக்கங்களும், தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நன்கொடை வழங்கியவர்களை தொடர்பு கொண்டு, அந்த பணத்தை வசூலிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: