×

கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் மோடி உத்தரவு

புதுடெல்லி: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், போதிய மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய, அதற்கான உற்பத்தியை அதிகரிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முக்கிய தேவையாக இருந்து வரும் மருத்துவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, போதிய ஆக்சிஜன் வழங்கலை உறுதிபடுத்த, பிரதமர் மோடி நேற்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். இதில், சுகாதாரம், சாலை போக்குவரத்து, தொழில் மேம்பாட்டு மற்றும் உள்நாட்டு வா்த்தக துறை உள்ளிட்ட அமைச்சக உயர் அதிகாரிகள் ஆக்சிஜன் குறித்த தகவல்களை பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர்.

குறிப்பாக, அதிகம் பாதிக்கப்பட்டு வரும் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம், டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் அடுத்த 15 நாட்களுக்கு தேவையான ஆக்சிஜன் இருப்பு குறித்தும், அதன் சப்ளை குறித்தும் பிரதமர் ஆய்வு மேற்கொண்டார். இம்மாநிலங்களில் மாவட்ட வாரியான நிலை குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், வரும் 20, 25 மற்றும் 30ம் தேதிகளில் மூன்று கட்டமாக 17,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் 12 மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்த விஷயத்தில் அனைத்து அமைச்சகங்களும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுவது முக்கியம். தேவைக்கேற்ற அளவுக்கு ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். உருக்காலைகளில் தேவைக்கு அதிகமாக உள்ள ஆக்சிஜன்களை மருத்துவ பயன்பாட்டிற்கு தர வேண்டும். நாடு முழுவதும் ஆக்சிஜன் ஏற்றிச் செல்லும் லாரிகள் தடையின்றி பயணம் செய்ய அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும். போதுமான ஆக்சிஜன்கள் நாட்டின் அனைத்து பகுதியிலும் சென்று சேர விநியோகத்தை விரைவுபடுத்த வேண்டும். சிலிண்டர் நிரப்பும் ஆலைகள் பாதுகாப்பு வழிமுறைகளுடன் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி தரப்படுகிறது’’ என கூறினார்.

சுகாதார அமைச்சர் இன்று ஆலோசனை
கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடனும், சுகாதார அமைச்சர்களுடனும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

Tags : PM Modi , Corona patient, Prime Minister Modi
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!