×

கையெழுத்து இல்லாமல் அறிக்கை தாக்கல் செய்வதா? சென்னை கலெக்டருக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இடங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த, வழக்கு கடந்த மாதம் 23ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வக்கீல் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் வருவாய்துறை செயலாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.  எனவே, இந்த வழக்கில் சென்னை கலெக்டர் ஏப்ரல் 16ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கலெக்டர் கையெத்திடாமல் அவரது தனி உதவியாளர் கையெழுத்திட்டிருந்தார்.
அறிக்கையை பார்த்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: இந்த நீதிமன்றம் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளது. ஆனால்,  “கலெக்டருக்காக” என்று வேறு நபர் கையெழுத்திட்டுள்ளார்.

கலெக்டர் பெயரில் அறிக்கை தயாரிக்கப்படும்போது அதில் கலெக்டர்தான் கையெழுத்திட வேண்டும். அவர் சார்பில் வேறு நபர் அறிக்கை தாக்கல் செய்வது கலெக்டரின் கவனமின்மையை காட்டுகிறது. எனவே, கலெக்டர் மீது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று இந்த நீதிமன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்கிறது. இது தொடர்பாக கலெக்டரும் விளக்கம் தரவேண்டும். வழக்கு விசாரணை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இந்த உத்தரவை அரசு வக்கீல் கலெக்டரிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

Tags : ICourt ,Chennai Collector , Filing report without signature? ICourt strongly condemns Chennai Collector
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு