×

முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரை முடித்து வைக்க அதிகாரிகள் தீவிரம்: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் திமுக மனு

சென்னை:  தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெறும் ஊழல்கள் குறித்து திமுக தொடர்ந்து ஆளுநர், டிஜிபி ஆகியோரிடம் புகார் கொடுத்து வந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் ேததி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு புகார்களை கொடுத்தார். கிராம ஊராட்சிகளுக்கு எல்இடி விளக்கு வாங்கியதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊழல், தரமற்ற நிலக்கரி வாங்கியும் போலி மின்கணக்கில் அமைச்சர் தங்கமணி ஊழல், அரசு அதிகாரிகளுக்கு பணியிடமாற்றம் மற்றும் நியமனம் செய்வதற்கு லஞ்சம் பெற்றதாக அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல், பாரத் நெட் டெண்டரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஊழல், மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் அமைச்சர் ஜெயக்குமார் செய்த ஊழல் என பட்டியலிடப்பட்டிருந்தது.இதேபோல், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது திமுக தொடர்ந்து பல ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதுடன் நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை டிஜிபியிடம் புகாரும் கொடுத்துள்ளது. அந்த புகார்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை ஊழல் (லஞ்ச) தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனர் அலுவலகத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:   கடந்த 5 ஆண்டாக தமிழ்நாட்டில் ஊழல் அதிகரித்துள்ளது. தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளிப்படுத்துவோம் என்று தமிழக மக்களிடம் திமுக உத்தரவாதம் அளித்துள்ளது. முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிராக கொடுக்கப்பட்ட ஊழல் தொடர்பான அனைத்து புகார்களையும் முடித்து வைக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிய வருகிறது.   ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனரகத்திடம் அளித்த புகார்களில் கையொப்பமிட்ட அதிகாரிகள் இவ்விஷயத்தில் இருந்து விலகியிருக்க வேண்டும். தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும் வரை, அதிமுகவின் தரப்பில் இருந்து வரும் எந்தவொரு அழுத்தத்தையும் கவனத்தில் கொள்ளக் கூடாது.



Tags : DMK ,Corruption , DMK urges officials to end corruption allegations against Chief Minister and Ministers
× RELATED திமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்