×

கத்தி முனையில் மிரட்டி நடைபாதை வியாபாரியிடம் 500 முகக்கவசங்கள் திருட்டு: வாலிபர் கைது

பெரம்பூர்: நடைபாதை வியாபாரியை கத்தி முனையில் மிரட்டி 500 முகக்கவசங்கள் திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, பொது இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதனை கடைபிடிக்காத நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இதன்காரணமாக, கடைகளில் முகக்கவசம் விற்பனை அதிகரித்துள்ளது. பொதுமக்களின் வசதிக்காக ஆங்காங்கே நடைபாதைகளில் முகக்கவசம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடைபாதை கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த முகக்கவசங்களை மர்ம நபர்கள் கத்தி முனையில் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  பெரம்பூர் முகமது இஸ்மாயில் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் அமீது (41). இவர், மாதவரம் நெடுஞ்சாலை சிம்சன் கம்பெனி எதிரே நடைபாதையில் துணிக்கடை நடத்தி வருகிறார். சமீப காலமாக இங்கு முகக்கவசம் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் இவரது கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள், சாகுல் அமீதை கத்தி முனையில் மிரட்டி அங்கிருந்த 500 முகக்கவசங்கள் மற்றும் கல்லாவில் இருந்த ₹5 ஆயிரத்தை திருடி சென்றனர்.

  இதுகுறித்து, சாகுல் அமீது திருவிக நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், பெரம்பூர் மடுமா நகரை சேர்ந்த அப்பு (எ) மகேஷ் (25), அவரது நண்பர் அரவிந்த் ஆகியோர் கத்தி முனையில் முகக்கவசங்களை திருடி சென்றது தெரிந்தது. இதில், மகேஷை கைது செய்தனர். விசாரணையில், முகக்கவசங்களை திருடி கூடுதல் விலைக்கு விற்க முயன்றது தெரிந்தது. தலைமறைவாக உள்ள அரவிந்தை தேடி வருகின்றனர்.

Tags : Valipar , 500 masks stolen from peddler at knife point: Valipar arrested
× RELATED ஸ்ரீதிவ்யா ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!