வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்குள் டாய்லெட், லேப்டாப் எடுத்துச்செல்வது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

சென்னை: தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் டாய்லெட், லேப்டாப் எடுத்து செல்வது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக துணை பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் அவர்கள் தலைமை செயலக வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் புகார் மனுவை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளோம். கடந்த 13ம் தேதி கோவையில், 14ம் திருவள்ளூரில், 15ம் தேதி சென்னை லயோலா கல்லூரியில் நள்ளிரவில் மொபைல் கழிப்பறைகள் எடுத்துச் செல்கிறோம் என்று சொல்லி லாரிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதை வேட்பாளர் கண்டித்துள்ளார்.

ஓட்டு எண்ணும் கல்லூரிக்குள் பாத்ரூமே இருக்காதா, பெண்களுக்காக தனியாக எடுத்துச் சென்றதாக இப்போது கூறுகிறார்கள். காவல்துறையில் உள்ள பெண் போலீசுக்காக எடுத்துச் சென்றதாக கூறுகிறார்கள். அந்த பெண் போலீசே தற்போது, நாங்கள் அதை உபயோகிப்பதே இல்லை என்று சொல்லி உள்ளனர். இந்த மாதிரி வேண்டுமென்றே தற்காலிக பாத்ரூம் என்று, லாரியை உள்ளே அனுமதித்துள்ளனர். ராமநாதபுரத்தில் 31 பேர் லேப்டாப் எடுத்துக் கொண்டு வாக்கு இயந்திரம் வைத்துள்ள பகுதிக்கு சென்றுள்ளனர். நெய்வேலி அண்ணா யுனிவர்சிட்டி, திருவள்ளூர் ஸ்டாங் ரூமுக்குள் செல்ல அனுமதித்துள்ளனர். இதற்கெல்லாம் காரணம் என்ன? லேப்டாப் எடுத்துச் செல்ல 31 பேர் எப்படி செல்வது, ஏதோ ஒருவர் சென்றால் கூட பரவாயில்லை. அதன் பொருள் என்ன? இதையெல்லாம் கண்டித்து 13ம் தேதியே புகார் கொடுக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்காத காரணத்தால் 14, 15ம் தேதி தொடர்ந்து தவறுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் தான் புகார் அளித்துள்ளோம்.

மத்திய தேர்தல் ஆணையருக்கும் புகார் அனுப்பி உள்ேளாம். திருக்கோவிலூர் தொகுதியில் வாக்கு எண்ணும் கல்லூரிக்குள் பிராக்ட்டிக்கல் தேர்வு எழுத 147 மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டரிடம் புகார் கொடுத்தோம். பிறகு வெளியே அனுப்பியதாக சொல்கிறார்கள். தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது. இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கு தெரிகிறதா என்பதே தெரியவில்லை. வாக்குப்பெட்டி வைத்துள்ள இடத்தில் தேர்தல் ஆணையரை தவிர வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது என்பது சட்டம். இதுதான் விதி. ஆனால் இதையெல்லாம் மீறி டாய்லெட், லேப்டாப் எடுத்து செல்வது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மந்திரி தொகுதிகளில் இதுபோன்று தவறு நடந்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் சேர்த்து தேர்தல் ஆணையத்தை ஆட்டி வைக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். நீதிமன்றத்தில் இதுபற்றி வழக்கு போடப்பட்டது. நீதிமன்ற உத்தரவும் பின்பற்றப்படவில்லை. பின்பற்றாவிட்டால் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளதாக புகார் அளிப்போம். சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு தேர்தல் ஆணையம் நடந்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினர்.

Related Stories:

>