×

கிருஷ்ணன்கோயில் முன்பு ராட்சத பள்ளம்: குடிநீர் வினியோகம் கடும் பாதிப்பு: மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் புத்தன்அணைகுடிநீர் திட்டப்பணிக்கு குழாய் பதிக்கும் பணியும், பாதாளசாக்கடை திட்டத்திற்கு குழாய் பகுதிக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமாக இருந்து  வருகிறது. இதனை தவிர பள்ளம் தோண்டும் போது முன்பு போடப்பட்டு உள்ள குடிநீர் குழாயும் ஆங்காங்கே உடையும் நிலையும் இருந்து வருகிறது. குடிநீர் குழாய் உடைவதால் சில பகுதிகளுக்கு குடிநீர் செல்வது தடைபடுவதுடன், தண்ணீர் விநியோகம் செய்யப்படும் நாட்களில் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

இதனால் மாநகராட்சி பகுதி மக்கள் குடிநீருக்கு பெரும் இன்னல்களை  சந்தித்த வருகின்றனர். கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள வெள்ளாளர் மேலதெருபகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் செல்லாமல் இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். வெள்ளார் மேலதெருவில் குடிநீர்  கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகதிடம் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் கிருஷ்ணன்கோவில் கோயில் முன்பு பள்ளம் தோண்டியது. மேலும் அந்த பகுதியில் செல்லும் குடிநீர் குழாயில் வால்வு பொருத்தினால் வெள்ளாளர் மேலதெருவிற்கு  தண்ணீர் கிடைக்கும் என கூறி வேலையை தொடர்ந்தனர்.

 ஆனால் பள்ளம் தோண்டி போட்டுவிட்டு வால்வு மாட்டாமல் அப்படியே போட்டுவிட்டு சென்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர். இது குறித்து அந்த பகுதி  முன்னாள் கவுன்சிலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: கிருஷ்ணன்கோவில் வெள்ளாளர் மேலதெரு பகுதிக்கு கடந்த ஒருவருடமாக குடிநீர் சீராக செல்வது இல்லை. இதனை தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு  கிருஷ்ணன்கோவில் பகுதியில் குடிநீர் குழாயில் வால்வு மாட்டி வெள்ளாளர் மேலதெருவிற்கு தண்ணீர் கொண்டு செல்லலாம் என தெரிவித்தனர்.

 இதனை தொடர்ந்து கிருஷ்ணன்கோவில் முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பணியை பாதியிலேயே போட்டுவிட்டு சென்றுள்ளனர். 20 நாட்களுக்கு மேல் அந்த பள்ளம் அப்படியே உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள்  மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இரவு நேரத்தில் வரும் சில முதியவர்கள் இந்த பள்ளத்தில் விழுந்து சென்றுள்ளனர்.
 
மேலும் பைக்கில் வரும் சிலரும் இந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளனர். கிருஷ்ணன்கோவில் பகுதியில் சமையல் காஸ் சிலிண்டர் குடோன் உள்ளது. இந்த குடோனுக்கு சிலிண்டர்களை ஏற்றி வரும் லாரி இந்த பள்ளத்தால் வரமுடியாத நிலை  இருந்து வருகிறது. இதனால் கிருஷ்ணன்கோவில் பகுதியில் சிலிண்டர் விநியோகம் பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் குழாயை சரிசெய்து பள்ளத்தை உடனே மூட நடவடிக்கை  எடுக்கவேண்டும் என்றார்.

Tags : Krishnan Temple , Giant crater in front of Krishnan temple: Drinking water supply severely affected: Corporation administration negligence
× RELATED குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு நடன...