காட்டு மிருகங்களுக்கு எதிரான வனக்குற்றங்களை கண்டுபிடிக்க சிப்பிப்பாறை நாய்களுக்கு பயிற்சி: வனத்துறையின் புதிய திட்டம்

சென்னை: காடுகளில் நடைபெற்றுவரும் குற்றங்களை கண்டுபிடிக்க தமிழகத்தின் பிரபலமான சிப்பிப்பாறை நாய்களுக்கு வனத்துறை பயிற்சி அளித்து வருகிறது.தமிழகத்தின் ராஜபாளையம், சிப்பிப்பாறை நாய்கள் உலகம் முழுவதும் பிரபலமான நாய்களாகும். இதில் சிப்பிப்பாறை நாய் வேகமாக ஓடுவதிலும் அதிக வலுவுள்ள வகையை சேர்ந்தது. மோப்ப சக்தியும் இதற்கு அதிகம்.இவை வழக்கமாக இளமஞ்சள் நிறத்தில், செம்மண்ணிறத்தவையாகவும், மிக லேசான வெள்ளி, சாம்பல் நிறக் கோடுகளுடன் மற்றும் நீண்ட வளைவான வாலுடன் இருக்கும். மற்ற நிறங்களாக சாம்பல் மற்றும் இளமஞ்சளில் சில   வேறுபாடுகள், கூட இருக்கலாம்.

 இது ஒரு நடுத்தர அளவு நாய், இவை  25 அங்குலம் அல்லது 63.5 செ.மீ உயரம் கொண்டவை. சமீபத்திய கணக்கீட்டின்படி ஆண் நாய்கள் தோராயமாக 63.0 செமீ, பெண் நாய்கள் 56.0 செமீ உயரம் உடையவையாக உள்ளன. இந்த நாய்களை தற்போது வனத்துறையினர் காடுகளில் நடைபெற்று வரும் வனக் குற்றங்களை கண்டுபிடிக்க பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வனத்துறை பயிற்சி கல்லூரியில் வளவன், கடுவன்,  கலிங்கன், ஆதவை என்ற 4 சிப்பிப்பாறை இன நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மோப்ப நாய்கள் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, கூடலூர் பகுதிகளில் உள்ள காடுகளில் வரும் ஜூன் முதல் பணியில் அமர்த்தப்படவுள்ளன. காடுகளில் உள்ள விலங்குகளுக்கு எதிரான குற்றங்களை கண்டறிய இந்த சிப்பிப்பாறை மோப்ப  நாய்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இது குறித்து தமிழ்நாடு வனப் பயிற்சி கல்லூரியின் முதல்வர் ஆர்.ராஜ்மோகன் கூறும்போது, ‘‘வளவன், கடுவன், கலிங்கன், ஆதவை ஆகிய நாய்கள் தமிழ்நாடு காவல் துறையினரால் பயிற்சி அளிக்கப்பட்டு வனத்துறையின் பணிக்கு  கொண்டுவரப்படுகிறது. அடர்ந்த காடுகளில் சுமார் 15 நாட்கள் இந்த நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

சிப்பிப்பாறை நாய்கள் தமிழகத்தை சேர்ந்த நாட்டு நாய்கள் என்பதால் இவற்றை பராமரிப்பது எளிது, செலவும் குறைவு. சிப்பிப்பாறை மற்றும்  கோம்பை நாய்கள் மோப்ப சக்தியில் அபார திறன் கொண்டவை என்பதால் வன விலங்குகளுக்கு எதிரான குற்றம் செய்பவர்கள் இவற்றிடம் இருந்து தப்ப முடியாது. சந்தனம் மற்றும் தேக்கு மர திருட்டை கண்டுபிடிப்பதிலும், காணாமல் போகும்  வன விலங்குகள், மான் வேட்டை ஆகியவற்றை கண்டுபிடிப்பதிலும் இந்த நாய்களுக்கு ஈடு இணையில்லை’’ என்று தெரிவித்தார்.

Related Stories:

>