டெல்லியை சாய்த்து ராஜஸ்தான் அபாரம்: 3 இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கள் பலம்..கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி

மும்பை: 14வது ஐபிஎல் தொடரில் நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 7வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன் எடுத்தது. பிரித்வி ஷா 2, தவான் 9, ரகானே 8, ஸ்டோனிஸ் 0 என ஆட்டம் இழக்க கேப்டன் ரிஷப் பன்ட் அதிகபட்சமாக 51 ரன் (32 பந்து, 9 பவுண்டரி) அடித்து ரன்அவுட் ஆனார். லலித் யாதவ் 20, டாம் கர்ரன் 21 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் ஜெய்தேவ் உனத்கட் 3, முஸ்தாபிஜுர் ரஹ்மான் 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியில், ஜோஸ் பட்லர் 2, மனன் வோக்ரா 9, கேப்டன் சஞ்சு சாம்சன் 4, ஷிவம் துபே 2, ரியான் பராக் 2 ரன்னில் வெளியேறினர். 42 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், டேவிட் மில்லர்-ராகுல் திவாடியா அணியை சரிவில் இருந்து மீட்டனர். திவாடியா 19 ரன்னில் வெளியேற டேவிட்மில்லர் 43 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 62 ரன் எடுத்து அவுட் ஆனார். டாம் கர்ரன் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட கிறிஸ் மோரீஸ் 2 சிக்சர் விளாசினார். 19.4 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் எடுத்த ராஜஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிறிஸ்மோரீஸ் 18 பந்தில் 4 சிக்சருடன் 36 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

முதல் போட்டியில், பஞ்சாப்பிடம் வீழ்ந்த ராஜஸ்தான் வெற்றி கணக்கை தொடங்கியது. 3 விக்கெட் மட்டுமின்றி 7 பந்தில் 11 ரன் எடுத்த ராஜஸ்தானின் உனத்கட் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது: 40 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்ததால் வெற்றி கடினம் என நினைத்தேன். மில்லர், மோரீஸ் இருந்ததால் சிறிது நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் வெற்றி பெறுவோம் என நினைக்க முடியவில்லை. எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 3 இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் எங்கள் பலம். அவை மற்றவற்றில் இருந்து சற்று வித்தியாசமாக இருப்பதால் நான் அதை வேறு வழியில் பயன்படுத்தலாம். கடைசி ஓவரில் மோரீஸ் ஒரு சிக்சரை அடிக்க முடியுமா என பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். முதல் போட்டியில் கடைசி ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாததை பற்றி கவலையில்லை. அதுபோல் 100 முறை வாய்ப்பு வந்தாலும் ஒற்றை ரன்னை எடுக்க மாட்டேன், என்றார்.

20 ரன் குறைவாக எடுத்துவிட்டோம்

டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் கூறியதாவது: ஆரம்பத்தில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் இறுதியில் எதிரணியினர் ஆதிக்கம் செலுத்திவிட்டனர். நாங்கள் இன்னும் சற்று சிறப்பாக பந்து வீசி இருக்க முடியும். நாங்கள் 15-20 ரன் குறைவாக எடுத்து விட்டோம். இருப்பினும் முடிந்த வரை போராடினோம். முதல் இன்னிங்சை விட 2வது இன்னிங்சில் பனியின் தாக்கம் இருந்தது, என்றார்.

Related Stories: