×

அமைச்சர்கள் தொகுதியில் தொடரும் அத்துமீறல்கள்!: 'வாக்கு எண்ணும் மையங்களுக்கு லாரிகள் செல்வது ஏன்?..தேர்தல் ஆணையத்தில் திமுக நிர்வாகிகள் புகார்..!!

சென்னை: அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் தொடர்ந்து அத்துமீறல்கள் நடைபெறுவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை திமுக துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சந்தித்தனர். அப்போது வாக்கு எண்ணிக்கை மையங்களில் தொடர்ந்து அத்துமீறல்கள் நடைபெறுவதாக கூறி, புகார் மனு அளித்தனர். கோவை, திருவள்ளூர், சென்னை லயோலா கல்லூரி ஆகிய மையங்களில் வெளிநபர்கள் நுழைந்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார். நள்ளிரவில் லாரிகள் செல்வது சந்தேகத்தை எழுப்புவதாகவும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு லாரிகள் செல்வது ஏன்? என்றும் தற்காலிக கழிப்பறைகள் கொண்டுசெல்லப்படுவதாக கூறப்படும் விளக்கம் ஏற்கத்தக்கது அல்ல என்றும் பொன்முடி தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை குறைந்து வருவதாகவும், தேர்தல் ஆணையத்தை மத்திய, மாநில அரசுகள் ஆட்டிவைப்பதாக சந்தேகம் எழுவதாகவும் பொன்முடி கூறினார். தொடர்ந்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தில் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படவில்லை என அவமதிப்பு வழக்கு தொடர்வோம் என எச்சரித்தார். வாக்குச்சாவடி மையங்களில் விதிகளை மீறி செயல்பட எப்படி அனுமதிக்கின்றனர் என கேள்வி எழுப்பிய திமுக நிர்வாகிகள், அமைச்சர் தொகுதிகளில் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினர்.


Tags : DMK ,Election Commission , Constituency of Ministers, Counting Center, Election Commission, DMK
× RELATED தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி...