×

சின்னாளபட்டியில் ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா: தகர சீட் வைத்து தெரு அடைப்பு

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் வசித்த வள்ளுவர் நகர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
சின்னாளபட்டியில் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் மூலம் கொரோனா தொற்று பரவி வருகிறது. இப்பகுதியில் உள்ள வள்ளுவர் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் குடும்பத்தை சேர்ந்த மேலும் மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நான்கு பேரும் கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் வசித்த வள்ளுவர் காலனியின்  இருபுறமும் தகர தடுப்பு கொண்டு சீல் வைக்கப்பட்டது.

அப்பகுதியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் நளினி, நேர்முக உதவியாளர் வல்லவன், பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி தலைமையில் சுகாதாரத்துறையினர் நேற்று வீடு, வீடாக சென்று தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் பரிசோதனை செய்து கபசூர குடிநீர் வழங்கினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ பெங்களூரு போன்ற வெளிமாநிலங்களில் வேலை பார்க்கும் சிலர், சட்டமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க சொந்த ஊருக்கு வந்தனர். அவர்களால் இப்பகுதியில் அதிகளவில் கொரோனா பரவியுள்ளது. கனரா வங்கி பகுதி, முத்தமிழ் நகர், திருநகர், தென்றல் தெருவைச் சேர்ந்த சுமார் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கடந்த வருடம் கொரோனா ஏற்பட்ட போது சின்னாளபட்டி பிரிவு பகுதியில் செக்போஸ்ட் அமைத்து, தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பின்புதான் பொதுமக்களை ஊருக்குள் அனுமதித்தனர். அதேபோல தற்போதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஸ்க் அணியாமல் வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றனர்.

Tags : Cinnamon Bar , Corona
× RELATED சின்னாளபட்டியில் திறந்தவெளி...