×

குளத்தில் நீர் இருப்பால் சீசன் ஜோர்: கூந்தன்குளம் சரணாலயத்தில் குவியும் பறவைகள்

நெல்லை: கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் இவ்வாண்டு பறவைகள் குவிந்த வண்ணம் உள்ளன. குளத்தில் நீர் இருப்பு காரணமாக உள்நாட்டு பறவைகள் அதிகம் காணப்படுகின்றன. நெல்லையில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூந்தன்குளம் கிராமம் 1994ம் ஆண்டு முதல் பறவைகள் சரணாலயமாக செயல்பட்டு வருகிறது. கூந்தன்குளத்திற்கு சைபீரியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. பின்டைல், பிளாக்விங்டு ஸ்டில், கிரேகிரேன், கிரின்சங், கார்கனி, பிளமிங்கோ உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை இங்கு தங்கி கூடுகட்டி குஞ்சு பொரிக்கும். வெள்ளை அரிவாள் மூக்கன், பெலிக்கன், நீர்காகம், சாம்பல் நாரை உள்ளிட்ட உள்நாட்டு பறவைகளுக்கு ஜனவரி முதல் ஆகஸ்டு வரை சீசன் காலமாகும்.

இங்குள்ள குளம் மற்றும் ஊர்பகுதி மரங்களில் கூடுகட்டி தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொரித்த உள்நாட்டு பறவைகள், ஆடி அமாவாசையோடு சீசன் முடிந்து தங்கள் பகுதிகளுக்கு திரும்பும். இவ்வாண்டு கூந்தன்குளத்தில் கூழக்கடா, பவளக்கால், செங்கால்நாரை, மஞ்சள்மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகள் அதிகம் காணப்படுகின்றன. இதில் செங்கால்நாரை மட்டுமே 5 ஆயிரத்திற்கும் அதிகமாக குளத்தில் காணப்படுகின்றன. பட்ட தலைவாத்து (பார்ஹெட்டட் கூஸ்) பறவைகளும் ஆயிரக்கணக்கில் குளத்தில் வசிக்கின்றன. மற்றபடி வெளிநாட்டு பறவைகள் வரத்து குளத்தில் குறைந்துள்ளது. குளத்தில் தற்போது ஆள்காட்டி குருவிகள், மணல்புறா, கல்குருவி, வானம்பாடி போன்றவை அதிகம் காணப்படுகின்றன.

இதுகுறித்து கூந்தன்குளம் ஊர்மக்கள் கூறுகையில், ‘’கூந்தன்குளத்தில் நல்ல சீசன் நிலவும் போது ஒரு லட்சம் வரை பறவைகள் வந்து செல்வது வழக்கம். இவ்வாண்டு சுமார் 10 ஆயிரம் பறவைகள் கூந்தன்குளத்தை சுற்றியுள்ள மரங்களில் காணப்படுகின்றன. பட்டதலை வாத்துகள் தவிர, சாம்பல்நாரை, மஞ்சள் மூக்கு வாத்து, செண்டு வாத்து, பட்டாணி உப்புக்குத்தி உள்ளிட்ட பறவைகளும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாண்டு கூந்தன்குளத்தில் தண்ணீரும் ஓரளவுக்கு இருப்பில் உள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் பெய்த மழை காரணமாக குளத்தில் நீர் கையிருப்பு உள்ளது.

மணிமுத்தாறு அணை தண்ணீர் தொடர்ந்து கிடைத்தால் இவ்வாண்டு இனிமேலும் பறவைகள் வரத்து மேலும் அதிகரிக்கும்.’’ என்றனர். தமிழகத்திலேயே கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் முக்கியத்துவம் பெற்று திகழ்வதற்கு இங்கு மொத்தம் 206 வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளதே காரணம் ஆகும். ஆனால் சமீபகாலமாக வெளிநாட்டு பறவைகள் வரத்து மிகவும் குறைந்து வருகிறது. பல வெளிநாட்டு பறவைகள் அடிக்கடி இடம் பெயர்ந்து சென்று பாலாமடை, ராஜவல்லிபுரம் குளங்களில் கூடுகட்டி வசிப்பதும் தெரிய வந்துள்ளது. வரும் மே மாத இறுதியில் சுமார் 40 ஆயிரம் பறவைகள் வரை கூந்தன்குளத்தில் கூடு கட்டி வசிக்க வாய்ப்புள்ளதாக ஊர்மக்கள் தெரிவித்தனர்.

சுற்றுலா பயணிகள் வரத்து குறைவு

கூந்தன்குளத்திற்கு கடந்த இரு ஆண்டுகளாகவே சுற்றுலா பயணிகளின் வரத்து மிகவும் குறைந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள் திறந்திருக்கும் போது ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் கூந்தன்குளத்திற்கு மொத்தமாக அழைத்து வந்து பறவையினங்களை காட்டிச் செல்வது வழக்கம். கொரோனாவால் கடந்தாண்டும், இவ்வாண்டும் பள்ளி, கல்லூரிகள் திறப்பதே பெரும்பாடாக உள்ளது. மற்றபடி வெளியூர் சுற்றுலா பயணிகளும் கொரோனாவை காரணம் காட்டி கடந்த இரு ஆண்டுகளாக கூந்தன்குளம் வந்து செல்ல தயக்கம் காட்டுகின்றனர். மூலைகரைப்பட்டி, நாங்குநேரி பகுதிகளில் இருந்து கூந்தன்குளத்திற்கு போதிய பஸ் வசதிகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர்.

Tags : Kundankulam Sanctuary , Sanctuary
× RELATED சென்னையில் பள்ளி கல்வித்துறை...