×

கடையம் அருகே 20 யானைகள் மீண்டும் அட்டகாசம் எதிரொலி: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சோலார் மின்வேலி

கடையம்,பிப்.27: கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டு  யானை, காட்டு எருமை, கட்டுப்பன்றி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறை சார்பில் மின் வேலி மற்றும் அகழி  அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அகழி தூர்ந்து போனது. அத்துடன் சோலார் மின்வேலியும்  பராமரிக்கப்படாத நிலையில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை  சேதப்படுத்தி வருவது சமீபகாலமாக தொடர்கதையாகி வருகிறது. இதனால், விவசாயிகள் லட்சக்கணக்கில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனிடையே கடந்த 24ம் தேதி இரவு கடையம் அருகே கருத்தபிள்ளையூரில் விகேபுரத்தை சேர்ந்த கிஷோர் குமார்  என்பவரது தோட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு குட்டிகளுடன் புகுந்த சுமார்  20 காட்டு யானைகள் 80 தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தன.  மேலும் 40  தென்னை மரங்களில் குருத்துகளை தின்றும் அங்குள்ள சொட்டு நீர் பாசன  குழாய்களை சேதப்படுத்தி, வேலியை உடைத்தும் சென்றன. இந்த தோட்டம் ஊரில் இருந்து சுமார் 100 மீட்டரில் இருந்ததால் பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர். தகவலறிந்ததும் கடையம் வனச்சரகர்  கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் இரவு முழுவதும் மலையடிவாரப் பகுதியில் தீ அமைத்து முகாமிட்டனர். இந்நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேதமடைந்த தென்னை மரங்களை பார்வையிட்டார்.  தொடர்ந்து விவசாயிக்கு ஆறுதல் கூறியதோடு குறைகளைக் கேட்டறிந்தார். இதையடுத்து சிவபத்மநாதன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தென்காசி கலெக்டர் துரை ரவிச்சந்திரன், அம்பை துணை இயக்குநர் உள்ளிட்டோரிடம் தொடர்புகொண்டு பேசி விரைவில் மலையடிவாரப் பகுதியில் விடுபட்ட இடங்களில் சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறையின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும். சேதமடைந்த பயிர்களுக்கு கூடுதலாக இழப்பீட்டுத் தொகை அரசிடமிருந்து பெற்று தரப்படும்’’ என விவசாயிகளிடம் உறுதியளித்தார். ஆய்வின் போது, கடையம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய துணைச் செயலாளர் வின்சென்ட், அவைத்தலைவர் கேபிஎன் சேட், மாவட்ட கவுன்சிலர் மைதீன்பீவி கோதர் மைதீன், ஊராட்சி தலைவர்கள் மலர்மதி சங்கரபாண்டியன், ஜீனத் பர்வீன் யாக்கோப், ரூஹான் ஜன்னத் சதாம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜஹாங்கீர், சுந்தரி மாரியப்பன், மாலிக் நகர் ஈஷாக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புகாரி மீரா சாகிப், சசிகுமார், அரவிந்த், மோகன், ஞானராஜ், தாமஸ் அந்தோணி, ஆதம் சுபேர், மூர்த்தி, மனோஜ், பயஸ்ராய், இருதயராஜ்  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்….

The post கடையம் அருகே 20 யானைகள் மீண்டும் அட்டகாசம் எதிரொலி: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் சோலார் மின்வேலி appeared first on Dinakaran.

Tags : Kadayam ,Western Ghats ,Dinakaran ,
× RELATED கடையம் அருகே காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்