×

தென்காசி ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிக்காக நூறாண்டு மரங்கள் வெட்டி அகற்றம்

தென்காசி, பிப்.27: தென்காசி ரயில் நிலையம் 120 ஆண்டுகள் பாரம்பரியமானது. 1.8.1903ல் கல்லிடைக்குறிச்சி-செங்கோட்டை வரையிலான மீட்டர்கேஜ் பாதை பயன்பாட்டிற்கு வந்தது. 26.11.1904 முதல் கொல்லத்தில் இருந்து சென்னை வரை பயணிகள் ரயில் தென்காசி, திருநெல்வேலி வழியாக இயக்கப்பட்டது. அதன்பிறகு 30.6.1927ல் தென்காசியில் இருந்து விருதுநகர் வரையிலான மீட்டர்கேஜ் பாதை அமைக்கப்பட்டது. தென்காசி ரயில்நிலையம், தென்காசி-செங்கோட்டை, தென்காசி-திருநெல்வேலி, தென்காசி-மதுரை ஆகிய மூன்று வழித்தடங்கள் சந்திக்கும் முக்கியமான சந்திப்பு ரயில் நிலையமாகும். மாவட்ட தலைநகரின் ரயில் நிலையமான தென்காசியில் நான்கு நடைமேடைகள் உள்ளன. நாளொன்றுக்கு தென்காசி-மதுரை மார்க்கத்தில் 4ரயில்களும், செங்கோட்டை மார்க்கத்தில் 4ரயில்களும் திருநெல்வேலி-செங்கோட்டை மார்க்கத்தில் 4ரயில்களும், செங்கோட்டை- திருநெல்வேலி மார்க்கத்தில் 4ரயில்களும், செங்கோட்டை-சென்னை மார்க்கத்தில் 3ரயில்களும், சென்னை-செங்கோட்டை மார்க்கத்தில் 3ரயில்களும் என 22 ரயில்கள் தென்காசி ரயில் நிலையத்தை கடந்து செல்கிறது. தென்காசி ரயில் நிலையத்தில் நடைமேடை இரண்டு, மூன்றிற்றிற்கு நடுவில் நூற்றாண்டு பழமையான வேம்பு, வாகை மரங்கள் வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் ராட்சத குடை போன்று நிழல் பரப்பிக் கொண்டிருந்தது‌. குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த மரங்கள் இதமான காற்றுடன் உற்சாகத்தை தந்தது. தற்போது மின் மயமாக்கல் பணிகளுக்காக இந்த மரங்கள் முழுமையாக வெட்டப்பட்டுள்ளது. அவற்றை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே பயணிகள் நல சங்கத்தினரும் கோரிக்கை விடுத்தும் ரயில்வே நிர்வாகம் செவிமடுக்கவில்லை. கிளைகளை மட்டும் வெட்டிவிட்டு மரத்தை அப்படியே வைத்திருக்கலாம். ஆனால் முழுமையாக வெட்டிவிட்டனர். கேரளா உள்ளிட்ட இடங்களில் மரங்களில் வெட்டுவதற்கும், பழமையை மாற்றுவதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.  எடுத்துக்காட்டாக செங்கோட்டை-புனலூர் வழித்தடத்தில் கழுதுருட்டி ஆற்றுக்கு அருகேயுள்ள 13 தூண் ரயில்வே பாலத்தை அகல ரயில்பாதைக்காக இடிக்க முற்பட்டபோது கேரளாவில் பயணிகள் சங்கத்தினர் பெரும் போராட்டத்தை கையில் எடுத்து இடிக்க விடாமல் தடுத்துடன், பழைய பாலத்தை அப்படியே பலப்படுத்தி அகல ரயில்பாதை பாலமாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.  தற்போது கேரளாவில் சில இடங்களில் மரங்களை வெட்டுவதற்கு கடும் எதிர்ப்பு உள்ள நிலையில் தென்காசி ரயில் நிலையத்தில் இயற்கை அழகை சீர்குலைக்கும் வகையில் 2,3வது நடைமேடைக்கு நடுவில் இருந்த மரங்கள் முழுமையாக வெட்டப்பட்டுள்ளது இயற்கை ஆர்வலர்களையும் பயணிகள் நல சங்கத்தினரையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது….

The post தென்காசி ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணிக்காக நூறாண்டு மரங்கள் வெட்டி அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Tenkasi railway station ,Thenkasi ,Thenkasi Railway Station ,Kallidaikurichi-Sengottai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு