முககவசம் அணியாமல் சென்றால் அபராதம்: தினமும் 100 கேஸ் போடணும் ஆலங்குளம் டிஎஸ்பி கண்டிப்பு: வைரலாகும் ஆடியோ

நெல்லை: முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் தினமும் 100 வழக்குகள் பதிய வேண்டும் என்று ஆலங்குளம்  டிஎஸ்பி, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரையும் மைக்கில் அழைத்து  கூறும் ஆடியோ வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா 2ம் அலை அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநிலம்  முழுவதும், முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வரும் நபர்கள்  மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத நபர்கள் மீது காவல்துறை  சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிற்கும் முக கவசம் அணியாதவர்கள் மீது 100 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது 3 வழக்குகளும் தினமும் போடுமாறு உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.  

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், அவரது  உட்கோட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குளம், பாவூர்சத்திரம்,  கடையம், ஊத்துமலை, சுரண்டை, வீ.கே. புதூர் ஆகிய ஸ்டேஷன்களின்  இன்ஸ்பெக்டர்களுடன் ‘‘ஓபன் மைக்’’ கில் பேசும் போது, ‘‘மாஸ்க் கேஸ்  எவ்வளவு போட்டிருக்கிறீர்கள்?’’ என்று கேட்கிறார். அதற்கு ஒரு ஸ்டேஷன் பெண்  இன்ஸ்பெக்டர் 25 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக கூறுகிறார். உடனே அவரிடம்,  தினமும் மாஸ்க் கேஸ் 100 பதிய வேண்டும் என்றும், சமூக இடைவெளி கேஸ் கணிசமாக  இருக்க வேண்டும் என்றும், மேலிடத்திலேயே 100 கேஸ் போட வேண்டும் என்று  கூறுவதாகவும் கூறி கண்டிப்பான குரலில் கூறுகிறார். அவர் மைக்கில்  பேசியது, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை  ஏற்படுத்தி வருகிறது.

Related Stories:

>