வேதாரண்யம், கன்னியாகுமரி அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுமக்கள் வாக்குவாதம்

வேதாரண்யம்:  வேதாரண்யம், கன்னியாகுமரி அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம்  பகுதியில் உள்ள கரியாப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு உட்பட அரசு  ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் டோஸ்  தடுப்பு  மருந்துகள்  பயனாளிகளுக்கு போட முடியாதபடி சுகாதாரத் துறையினர் சென்னைக்கு  அதிக அளவில் தேவை என்று கூறி அனைத்து கிராம மற்றும் நகர்புர  ஆஸ்பத்திரிகளில் உள்ள தடுப்பூசி மருந்துகளை எடுத்து சென்று விட்டதாக  கூறப்படுகிறது. இதனால் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் பயனாளிகளுக்கு  போடுவதற்கு தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று  வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் காலையில் தடுப்பு ஊசி போட சுமார்  200க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இவர்களுக்கு முதலில் தடுப்பு ஊசி  இல்லை  என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சென்னைக்கு மருந்து  அவசரமாக கொண்டு செல்லப்பட்டதால் தடுப்பூசி இல்லை என கூறியுள்ளனர்.  

இதனால் பொதுமக்கள் ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு  அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்து தடுப்பூசி வர வைக்கப்பட்டு 200  நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்பு தடுப்பூசி இருப்பு இல்லை என்று  கூறி டோக்கன் வழங்கி நாளை வாருங்கள் என அனுப்பிவிட்டனர். அதனால், பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். குமரியில் ஏமாற்றம்: குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று தடுப்பூசி போடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. குறைந்த அளவே தடுப்பூசிகள் இருந்தால், நாளை வருமாறு கூறி அனுப்பி வைத்தனர். அதனால், பலர் வாக்குவாதம் செய்தனர். இதேநிலைதான், நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள நகர ஆரம்பசுகாதார நிலையத்திலும் ஏற்பட்டது.

Related Stories:

>