தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு: வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை ஜப்தி செய்ய உத்தரவு: திருச்சி நீதிமன்றம் அதிரடி

திருச்சி:  தஞ்சாவூர் கரந்தையை  சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிவேல் (35). இவர் கடந்த 2003 பிப்ரவரி  5ம் தேதி சென்னையிலிருந்து அரியலூருக்கு வைகை (சென்னை-மதுரை) எக்ஸ்பிரஸ்  ரயிலில் பொதுவகுப்பு பெட்டியில் பயணம் செய்துள்ளார். விக்ரவாண்டி அருகே ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, டிராக்டர்  மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பழனிவேல் உள்பட பலர்  படுகாயமடைந்தனர். இதில் பழனிவேல் 50 சதவீதம் நிரந்தர  ஊனமடைந்தார். ரயில்வே வாரியம் ரூ.2.50 லட்சம் இழப்பீடு வழங்க கோரி திருச்சி மோட்டார் வாகன விபத்து இழப்பீடு  தீர்ப்பாயத்தில் (கூடுதல் 3வது சார்பு நீதிமன்றம்) வழக்கு தொடர்ந்தார். விபத்துக்கு காரணமான டிராக்டர் உரிமையாளர்தான் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கூறி வழக்கை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதை  எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பழனிவேல் மேல்முறையீடு செய்தார்.

நீதிபதி சாமிநாதன் விசாரித்து, ரயில்வே வாரியம்  இழப்பீடு வழங்க கடந்த 2017ல் உத்தரவிட்டார். ஆனால், ரயில்வே  துறை 60 சதவீதம் தொகையை கோர்ட்டில் செலுத்திவிட்டு, மீதி தொகையை செலுத்தாமல் இழுத்தடித்தது.  இந்நிலையில், திருச்சி  கூடுதல் 3வது சார்பு நீதிபதி விவேகானந்தன் நேற்று இந்த வழக்கை விசாரித்து, இழப்பீடு வழங்காமல் ரயில்வே நிர்வாகம் இழுத்தடித்ததால் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை  ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

Related Stories:

>