தேர்தல் ஆணையமே மாநிலங்களவை எம்பி நியமனத்தில் இடஒதுக்கீடுக்கு சட்ட திருத்தம்: ஐகோர்ட் கிளை யோசனை

மதுரை: மாநிலங்களவை எம்பி நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்க சட்டதிருத்தம் கொண்டு வரலாம் என ஐகோர்ட் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.  மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி குருவையா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சட்டமன்ற தேர்தல்களில் எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு என தனித்தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை எஸ்சி பிரிவினருக்கு 44 தொகுதி, எஸ்டி பிரிவினருக்கு 2 தொகுதி என மொத்தம் 46 தனித் தொகுதிகள் உள்ளன. ஆனால், மாநிலங்களவை எம்பிக்கான தேர்தலில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுவதில்லை. இதனால், மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தில் எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு முக்கியத்துவம் இல்லாத நிலை உள்ளது.

இதுதொடர்பாக நான் அனுப்பிய மனுவை, சட்டமன்ற செயலரின் பரிசீலனைக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்திடத் தேவையான வகையில் விதிகளை உருவாக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், ‘‘இதுதொடர்பான சட்டத்தில் தேர்தல் கமிஷன் உரிய திருத்தம் செய்யலாம். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories:

>