×

ஆப்கானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்க படை முழுமையாக வாபஸ் : அதிபர் பைடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: நேட்டோ படைகளும் மூட்டை கட்டுகிறது

மே 1 முதல் துவங்கும்
* இப்போது, அந்த நாட்டில் 2500 அமெரிக்க வீரர்கள் மட்டுமே உள்ளனர்.
* இது தவிர, நேட்டோ நாடுகளின் 7 ஆயிரம் வீரர்களும் உள்ளனர்.
* நேட்டோ அமைப்பில் 36 நாடுகள் இடம் பெற்றுள்ளன.
* படைகள் வாபஸ் நடவடிக்கை மே 1ம் தேதி முதல் துவங்குகிறது.
* ஆப்கானிஸ்தானில் நடந்த சண்டையில் அமெரிக்க வீரர்கள் 2400 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் செப்டம்பர் 11ம் தேதிக்குள் முழுமையாக திரும்பப் பெறப்படும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்காவை பின்பற்றி, நேட்டோ படைகளும் அங்கிருந்து வெளியேறுகின்றன. அமெரிக்காவில் கபந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், புதிய அதிபராக பதவியேற்றதில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு முக்கிய முடிவுகளை  எடுத்து வருகிறார். கடந்த முறை டிரம்ப் அதிபராக இருந்தபோது எடுத்த முக்கிய முடிவகளில், ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக முகாமிட்டுள்ள அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவதும் ஒன்றாகும். ஆனால், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆதிக்கம் குறைந்து விடும் என்ற காரணத்தால், குறிப்பிட்ட அளவு வீரர்களை மட்டுமே திரும்பப் பெற்றார். 2500 வீரர்கள் தொடர்ந்து ஆப்கானில் தங்கியுள்ளனர்.  

இந்நிலையில், புதிய அதிபரான பைடன், அமெரிக்க வீரர்களை வரும் செப்டம்பர் 11ம் தேதிக்குள் முழுமையாக திரும்பப் பெறப்படுவார்கள் என்ற அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டார். அமெரிக்காவில் கடந்த 2001, செப்டம்பர் 11ம் ராணுவ தலைமையகமான பென்டகன்,  110 மாடிகளை கொண்ட நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா தீவிரவாதிகள், விமானங்களை கடத்திச் சென்ற மோதி தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர தாககுதலில் நியூயார்க் இரட்டை கோபுரம் தரை மட்டமானது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரம் மக்கள் படுகாயம் அடைந்தனர். உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா, இதனால் அதிர்ந்தது. எந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்து கொண்டிருந்த தலிபான் தீவிரவாத அமைப்பு, ஒசாமா பின்லேடனுக்கும், அல்கொய்தா தீவிரவாதிகளுககும் புகலிடம் அளித்து வந்தது.

இதனால், அந்த நாட்டின் மீது ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாக,  2001ம் ஆண்டு, அக்டோபர் 7ம் தேதி அந்நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் போர் தொடுத்தது.  இந்த தாக்குதலில் நேட்டோ படைகளும் பங்கேற்றன. இதன்மூலம், தலிபான் ஆட்சியை வீழ்த்தி, அங்கு ஜனநாயக முறையிலான ஆட்சியை அமெரிக்கா ஏற்படுத்தியது. அதன் பிறகு, போரில் தோற்று ஆட்சியை இழந்த தலிபான் தீவிரவாத அமைப்பு, உள்நாட்டு போரை தொடங்கியது.  அவர்களை ஒடுக்கவும், தனது தயவில் அமைக்கப்பட்ட ஆட்சிக்கு பாதுகாப்பு அளிக்கவும் அமெரிக்க, நேட்டோ படைகள் அங்கு குவிக்கப்பட்டன. அந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் காடுகளில் பதுங்கி இருந்த பின்லேடனை கொல்ல, அமெரிக்க படைகள் பலமுறை முயற்சி செய்தன. இருப்பினும்,  2011ம் ஆண்டு பாகிஸ்தானில் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்த பின்லேடனை, பராக் ஒபாமா அதிபராக இருந்த போது அமெரிக்க படை கொன்றது.

அதன் பிறகு, அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகள் குறைய தொடங்கின. இதனால்,  ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இதனால்,  அங்கு மீண்டும் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கியது. அவர்கள் நடத்திய தாக்குதலில் நூற்றுக் கணக்கான அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இதனால்,  அங்கு மீண்டும் அமெரிக்க படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இங்கு நடந்த சண்டையில் அமெரிக்க வீரர்கள் அதிகளவில் கொல்லப்பட்டதால், அமெரிக்காவில் அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்தனர். இதனால், தனது வீரர்களை அமைதியான முறையில் திரும்பப் பெறுவது பற்றி, தலிபான் அமைப்புடன்  கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது.  பெரிய இழுபறிக்கு பிறகு கடந்தாண்டு பிப்ரவரியில், இரு தரப்புக்கும் இடையே அமைதி  ஒப்பந்தம் ஏற்பட்டது.  அதில், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள்  மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கு பிரதிபலனாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் 2021ம் ஆண்டு மே 1ம் தேதிக்குள் முழுமையாக திரும்பப் பெறப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்ததுக்குப் பிறகு,  ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வீரர்கள் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இரட்டை கோபுர தாக்குதலின் 20ம்  ஆண்டு தினம்  வரும் செப்டம்பர் 11ம் அனுசரிக்கப்பட உள்ளது, அதற்கு முன்பாக, ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து அமெரிக்க  வீரர்களும் திரும்பப் பெறப்படுவா–்கள் என்ற பைடன் நேற்று அறிவித்தார்.  இது பற்றி நாட்டு மக்களுக்கு பைடன் நேற்று ஆற்றிய உரையில், ‘‘ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் பல தலைமுறைக்கு முகாமிட்டு இருக்க வேண்டும் என்ற எந்த உறுதியும் கொடுக்கப்படவில்லை. தீவிரவாதிகள் நம்பை தாக்கினார்கள். நாம் அவர்களை தாக்கினோம். அவர்கள் மீது போர் தொடுத்தோம். ஒசாமா பின்லேடனை கொல்ல வேண்டும் என்ற நமது குறிக்கோள் நிறைவேறி விட்டது.  ஈராக், ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா அமைப்பு சிதைக்கப்பட்டு விட்டது.  

அதனால்,  நமது படைகள் இனியும் ஆப்கானிஸ்தானில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் உள்ளன. அந்நாடுகள் அதை செய்ய வேண்டும்,’’ என்றார். முன்னதாக, ஆப்கானிஸ்தானில் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த அமெரிக்க வீரர்களின் அமைக்கப்பட்டுள்ள ஆரிங்கடன் தேசிய நினைவிடத்துக்கு சென்ற பைடன் அஞ்சலி செலுத்தினார்.

Tags : US ,Afghanistan ,President Biden , US troops withdraw from 20-year-old camp in Afghanistan: President Biden
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...