எஸ்.ஐ.க்கு 2வது மனைவி, நடிகைக்கு 4வது கணவர் எஸ்ஐ மீது நடிகை ராதா பரபரப்பு புகார்: உதவி கமிஷனர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவு?

சென்னை: சுந்தரா டிராவல்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதா (38). அதன் பிறகு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காததால் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது சென்னை சாலிகிராமம் லோகையா தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை ராதா பரபரப்பு புகார் ஒன்று நேற்று முன்தினம் அளித்துள்ளார். அந்த புகார் குறித்து போலீசார் கூறியதாவது: ராதா, சினிமாவில் கதாநாயகியாக நடித்து வந்தவர். திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து மகன், தாயுடன் சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். ஆர்.ஏ.புரம் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் உதவி ஆய்வாளர் வசந்த்ராஜ்(40) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. வசந்த்ராஜ் ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். திருவான்மியூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த போது நடிகை ராதாவுடனான நட்பு காதலாக மாறியது.

இதனால், இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். பிறகு நடிகை ராதா அழகில் மயங்கிய உதவி ஆய்வாளர், ராதாவை யாருக்கும் தெரியாமல் இருவரும் தனியாக வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டனர்.  அதற்கு பிறகு இருவரும் கணவன், மனைவி போல் ராதா வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர். உதவி ஆய்வாளர் வசந்தராஜ் இரவு பணிக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு நடிகை ராதாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் உதவி ஆய்வாளர் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவரது மனைவி திருவான்மியூர் காவல் நிலையத்துக்கு வந்து இன்ஸ்பெக்டரிடம் தனது கணவர் குறித்து புகார் அளித்துள்ளார். அதற்கு இன்ஸ்பெக்டர், உதவி ஆய்வாளர் மற்றும் அவரது மனைவியை அழைத்து சமாதானம் செய்துள்ளார். நடிகை ராதா உடன் நெருங்கி பழகிய விபரம் மனைவிக்கு தெரிந்ததால் வசந்த்ராஜ் உடனே வடபழனிக்கு டிரான்ஸ்பர் வாங்கினார்.

அதன் பிறகு நடிகை ராதாவுடன் மகிழ்ச்சியாக உதவி ஆய்வாளர் வசித்து வந்துள்ளார். அப்போது நடிகை ராதாவுக்கு ரூ.12 லட்சத்தில் சொகுசு கார் ஒன்றும் உதவி ஆய்வாளர் வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் இருவரும் பல இடங்களில் சென்று வந்துள்ளனர். இதுதவிர நடிகை ராதா வீட்டையும் புதுப்பிக்க அவர் பல லட்சம் கொடுத்து உதவியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகை ராதா இருவரும் தனியாக வீட்டில் திருமணம் செய்ததை வைத்து தனது ஆதார், உள்ளிட்ட ஆவணங்களில் உதவி ஆய்வாளர் வசந்த்ராஜூக்கு தெரியாமல் தனது கணவர் வசந்த்ராஜ் என்று மாற்றியுள்ளார். இது வசந்த்ராஜிக்கு தெரியவந்தது. இதுகுறித்து நடிகை ராதாவிடம் அவர் கேட்டுள்ளார். அதற்கு அவர் எனக்கு நீங்கள் தாலி கட்டிய கணவர் அதனால் தான் நான் அனைத்து ஆவணங்களிலும் எனது கணவர் நீங்கள் தான் என்று மாற்றினேன் என்று கூறியுள்ளார்.

இதனால் இவருவருக்கும் இடையே தினமும் தகராறு நடைபெற்று வந்துள்ளது. ஒரு கட்டத்தில் வசந்த்ராஜ் நடிகை ராதாவுடன் இருந்து பிரிந்து செல்ல முயற்சி செய்து வடபழனி காவல் நிலையத்தில் இருந்து எண்ணூர் காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் பெற்று சென்றார். ஆனால் நடிகை ராதா எனது கணவர் நீங்கள் தான் என்று கூறி செலவுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சினிமா நடிகை என்பதால் ராதாவை தங்களது படங்களில் நடிக்க வரும்படி பலர் அவரது வீட்டிற்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நடிகை ராதா மீது சந்தேகமடைந்த உதவி ஆய்வாளர் வசந்த்ராஜ் பிரிந்து செல்ல முயன்றுள்ளார். ஆனால் நடிகை ராதா தனது கணவர் நீங்கள் தான் என்று கூறி உங்களுடன் தான் நான் வாழ்வேன் என்று கூறி வந்துள்ளார்.

அதற்கு உதவி ஆய்வாளர் மறுத்துள்ளார். நான் உன்னுடன் நெருங்கி பழகியதை பயன்படுத்தி எனது சொத்தை அபகரிக்க பார்க்கிறாய் என்று கூறி தகராறில் ஈடுபட்டு தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.அதைதொடர்ந்தே நடிகை ராதா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மீது புகார் அளித்துள்ளார். அதேநேரம், நடிகை ராதா மீது எங்கள் காவல் நிலையத்திற்கு பல புகார்கள் வந்துள்ளது. முதல் கணவரை பிரிந்து சென்ற போது நடிகை ராதா, தனது கணவர் மீது புகார் ஒன்று அளித்தார். அதன் பிறகு திருவல்லிக்கேணி தொழிலதிபர் ஒருவர் மீது தன்னுடன் சேர்ந்து வாழ்ந்துவிட்டு விலகி செல்வதாக புகார் அளித்தார். அந்த புகாரின் படியும் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதேபோல், கோடம்பாக்கத்தை சேர்ந்த அதிமுக பிரபமுகர் ஒருவர் மீது புகார் அளித்தார். தற்போது உதவி ஆய்வாளர் மீது புகார் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும் நடிகை ராதா புகார் அளிக்கும் போது எதிர் தரப்பு நபர்கள் நடிகை ராதா எங்களை ஏமாற்றி பணம் மற்றும் சொத்துக்களை அபகரிக்க முயல்வதாக தான் புகார் அளித்துள்ளனர்.

இதனால் தற்போது நடிகை ராதா அளித்துள்ள புகாரை நாங்கள் வடபழனி உதவி கமிஷனரிடம் தெரிவித்துள்ளோம். அதன்படி நேற்று பிற்பகல் 3 மணிக்கு வடபழனி உதவி கமிஷனர் அலுவலகத்தில் இருவரும் நேரில் வந்து விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பி வைத்தோம் இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். போலீசார் அனுப்பிய சம்மன்படி நடிகை ராதா நேற்று மாலை உதவி கமிஷனர் முன்னிலையில் ஆஜராகவில்லை. அவரது வீட்டிற்கு சென்று போலீசார் பார்த்த போது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவர் சொந்த ஊரான ஐதராபாத்திற்கு சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகை ராதாவிடம் விசாரணை நடத்தி பிறகு தான் முழு விபரங்களையும் எங்களால் தெரிவிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>