அரக்கோணம் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்: பாஜ மாநில தலைவர் பேட்டி

சென்னை: ‘‘அரக்கோணம் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என்று பாஜ மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி:  அம்பேத்கரின் 130வது பிறந்த நாள். ஒரு தேசிய தலைவரை கொண்டாடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அனைத்து சகோதரர்களும் போற்றுகிறார்கள். ஆனால், ஒரு சில அரசியல் கட்சிகள் நாங்கள்தான் அம்பேத்கருக்கு சொந்தம் என்பது போல், அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க செல்வோரை கலவரம் செய்வது என்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. திட்டமிட்டு ஒரு கலவரத்தை மதுரையில் நடத்தியிருக்கிறார்கள். முன்கூட்டியே திட்டமிட்டு எங்கள் நிர்வாகிகளை தாக்கியிருக்கிறார்கள். தமிழக அரசாங்கம் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாதி கலவரத்தை தூண்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த இடத்தில் மாலை போடக்கூடாது என்று சொன்னார்களோ, நாளைக்கு (இன்று)  நான் சென்று மாலை அணிவிக்க இருக்கிறேன். அதே இடத்தில் ஆர்ப்பாட்டம்  நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறோம். அரக்கோணம் சம்பவம் நடக்கக்கூடாத ஒரு சம்பவம். மனித உயிர் விலைமதிப்பற்றது. அந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நெடுஞ்சாலை துறை ரெக்கார்டில் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்று தான் இன்றைக்கும் உள்ளது. மாநகராட்சியில் ஈ.வெ.ரா. சாலை என்று மாற்றியிருக்கிறார்கள். இதற்கும் பாஜவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று தெரியவில்லை. இது மாநில அரசு சம்பந்தப்பட்டது. இந்த விஷயத்தில் அரசாங்கம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை நாங்கள் வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>