×

பிரசாரம் ஓய்ந்தது: வேளச்சேரி வாக்குச்சாவடியில் நாளை மறுநாள் மறு வாக்குப்பதிவு: சிசிடிவி பொருத்தி வாக்குப்பதிவு இயந்திரம் கண்காணிப்பு

சென்னை: வேளச்சேரி வாக்குச்சாவடியில் நாளை மறுநாள் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர் அனைவரும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். சிசிடிவி பொருத்தி வாக்குப்பதிவு இயந்திரம் கண்காணிக்கப்பட  உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங்க் ரூமில் மூன்றடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே வேளச்சேரி தொகுதியில், ஒரு  வாக்குச்சாவடியிலிருந்து இருசக்கர வாகனத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் தீவிர விசாரணை நடத்தியது. இதையடுத்து இந்த சம்பவம்  தொடர்பாக 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முதலில் இது பயன்படுத்தப்படாத மற்றும் பழுதான இயந்திரங்கள் என்று தகவல் வெளியான நிலையில், “வேளச்சேரியில் எடுத்துச்செல்லப்பட்ட இயந்திரங்கள் 50 நிமிடங்கள் பயன்பாட்டில் இருந்துள்ளது. அதில் 15 வாக்கு ஒப்புகை சீட்டுகள்  இருந்தது.

 இந்தத் தேர்தல் விதிமீறல் தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறு  வாக்குப்பதிவு நடத்தப்படுமா என்பதைத் தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்” என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், “வேளச்சேரி தொகுதியின் சீதாராம் நகரில் டிஏவி பப்ளிக் பள்ளியில் உள்ள 92ஆம் எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு வரும் 17ம் தேதி காலை 7 மணிக்குத்  தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும். அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் விரிவான விளம்பரங்கள் செய்யப்படும். மறு வாக்குப்பதிவு குறித்த தகவல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுக்கு  எழுத்துபூர்வமாகத் தெரிவிக்கப்படும். மறு வாக்குப்பதிவினை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்திடத் தேவையான கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி தொகுதியில்  மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா, அதிமுக சார்பில் எம்.கே.அசோக், அமமுக சார்பில் எம்.சந்திரபோஸ், மக்கள் நீதி மய்யம் சார்பில் சந்தோஷ் பாபு, நாம் தமிழர்  கட்சி சார்பில் மோ.கீர்த்தனா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 548 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் மூலம் தண்டோரோ மற்றும் ஒலி பெருக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடியில் சிசிடிவி  பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தபால் மூலம் வாக்களித்தவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் மறு வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இத்தொகுதியில்  போட்டியிடக்கூடிய வாக்காளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். தொடர்ந்து இன்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.


Tags : Velachery , Campaign is over: Re-polling at Velachery polling station tomorrow: CCTV fitting voting machine monitoring
× RELATED சென்னை வேளச்சேரியில் பட்டா கத்தியால்...