நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை மூல வைகையாறு மற்றும் வைகை அணைக்கு நீர்வரத்து

வருசநாடு: வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால், அணைக்கு தற்போது 40 கனஅடி நீர்வரத்து உள்ளது. இதனால்  அணையின் நீர்மட்டம் மீண்டும் உயரம் என விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் வருசநாடு அருகே உள்ள மலை கிராமங்களிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால், மூல வைகையாற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு  பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இதனால் கடந்த ஆண்டு 2 முறை அணை முழு கொள்ளளவை எட்டியது.

இதையடுத்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் உசிலம்பட்டி மற்றும் நிலக்கோட்டை வட்டாரத்திற்கு 58ம் கிராம கால்வாய்  மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் வைகை அணையை நம்பியுள்ள அனைத்து பாசனப் பகுதிகளுக்கும் தண்ணீர் சென்று விட்டதால், அணையில் இருப்பு உள்ள  தண்ணீரை தேக்கி வைத்து, தேவைகேற்ப பயன்படுத்த பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர்.  மேலும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் மழை இருந்தது. அதன் பின்னர் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது.

கடும் வெயிலால் நீர் ஆவியாவதாலும், குடிநீருக்காக 72 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.  இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு மற்றும் நீர்தேக்கப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், அணைக்கு தற்போது 40 கனஅடி நீர்வரத்து உள்ளது.  இதனால் 71 அடி உயரமுள்ள அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 63.52  அடியாக உள்ளது. இன்னும் 3 நாட்கள் வரை மழை தொடரும் என செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  

வருசநாடு அருகே மூல வைகையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரசரடி, வெள்ளிமலை மற்றும் சுற்றுப்புற மலை கிராமங்களிலும் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து வருகிறது, இதனால் வருசநாடு மூல வைகையாற்றில் நீர்வரத்து  அதிகரித்து வருகிறது. எதிர்பாராத மழையாலும், மூல வைகையாற்றில் தண்ணீர் பெருக்கெடுப்பதாலும், இப்பகுதிகளை சேர்ந்த மானாவாரி நில விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இது தொடர்பாக வருசநாடு பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவு கோடை மழை பெய்யவில்லை. இந்த ஆண்டு கோடை மழை பெய்து வருவதால், மானாவாரி  பயிர்களுக்கு உதவியாக இருக்கும். கொட்டைமுந்திரி, பீன்ஸ், அவரை, எலுமிச்சை இலவமரம் உள்ளிட்ட இந்த மழை பெரிதும் உகந்ததாக இருக்கும். மேலும் இந்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. மலை கிராமங்களில்  குளிர்ச்சியான காற்று வீசுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது’’ என்று தெரிவித்தனர்.

Related Stories:

>