படுக்கையும் இல்லை.. போதிய பரிசோதனையும் இல்லை!: 'தடுப்பூசி திருவிழா'என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது.. மத்திய அரசு மீது ராகுல் தாக்கு..!!

டெல்லி: பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் மத்திய அரசு நாடகம் ஆடுவதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலையை வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரேநாளில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுடன், கட்டுப்பாடுகளும் மற்றும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். அதன்படி ஏப்ரல் 11 - 14ம் தேதி வரை திகா உத்சவ் எனும் தடுப்பூசி திருவிழாவை மத்திய அரசு நடத்தியது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் தடுப்பூசி திருவிழா எனும் பெயரில் மத்திய அரசு நாடகம் ஆடுவதாக ராகுல் புகார் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை மத்திய அரசு கையாளும் விதம் குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, தடுப்பூசி திருவிழா குறித்து தற்போது விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, மருத்துவமனைகளில் போதிய பரிசோதனைகள், படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் ஆக்சிஜன் இன்றி நோயாளிகள் சிரமப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி இல்லாமல் திணறி வரும் நிலையில் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் மத்திய அரசு பாசாங்கு செய்வதாகவும், பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் நாடகமாடுவதாகவும் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். மேலும் மிகப்பெரிய அளவில் மக்களிடம் நன்கொடை பெறப்பட்டு உருவாக்கப்பட்ட பி.எம்.கேர். நிதி என்ன ஆனது? என்றும் ராகுல்காந்தி கேள்வி  எழுப்பியுள்ளார்.

Related Stories:

>