ஏழை மாணவர்கள் பயன்பெறும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் புதுவையில் எப்போது நடைமுறைக்கு வரும்?

புதுச்சேரி: புதுவையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் இந்த ஆண்டாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என பெற்றோரும், கல்வியாளர்களும் வலியுறுத்துகின்றனர். தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஏழை மாணவர்களை இலவசமாக சேர்க்க வழிவகுக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2010ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. நாடு முழுவதும் 20 மாநிலங்கள் இச்சட்டத்தை அமல்படுத்தியுள்ளன. 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாக கல்வி கற்கும் உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தும் வகையிலான இச்சட்டத்தை புதுச்சேரி அரசு தனது அரசாணையிலும் அதிகாரபூர்வமாக வெளியிட்டிருந்தது. தொடர்ந்து, சட்டம் நடைமுறைக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதுவை மாநிலத்தில் இன்று வரை சட்டத்தை அமல்படுத்தவில்லை.

புதுவை தனியார் பள்ளிகளில் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டும் பெற்றோர் - மாணவர் சங்கத்தினர், ஏழை மாணவர்கள் நலன் கருதி கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை வரும் கல்வியாண்டிலாவது நடைமுறைக்கு கொண்டுவர துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். தமிழ்நாட்டில் வரும் மே மாதம் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடத்தப்பட இருப்பதை சுட்டிக்காட்டி புதுவையிலும் சட்டத்தை அமல்படுத்தி மாணவர் சேர்க்கையை தொடங்குமாறு பெற்றோர் - மாணவர் சங்கத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக அனைத்து பள்ளிகளின் தரத்தையும் உயர்த்தி, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரமான கல்வி கிடைக்க வழி வகை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>