திருப்பத்தூர் அருகே கோடையிலும் வற்றாத சுனைகளுடன் புதிய கற்கால மனித வாழ்விடங்கள் குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு..!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே புதிய கற்கால குகை ஓவியங்கள், மனித வாழ்விடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டிக்கு அருகே தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஆ.பிரபு, தொல்லியல் ஆய்வாளர் சேகர் மற்றும் ஆய்வு மாணவர்கள் தரணிதரன், கிருஷ்ணகுமார் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் புதிய கற்கால பாறை ஓவியங்கள் மற்றும் வாழ்விடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து பேராசிரியர் ஆ.பிரபு கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள செல்லியம்மன் கொட்டாய் என்ற இடத்தில் குகைகள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டோம்.

அப்போது அங்குள்ள செல்லியம்மன் கோயில் வளாகத்தில் புதிய கற்கால கற்கோடாரிகள் வழிபாட்டில் இருப்பதை கண்டறிந்தோம். தொடர்ந்து கோயில் எதிரே உள்ள ‘தம்புரான் குன்று’ என்ற சிறிய குன்றில் ஆய்வு செய்தபோது அங்கு புதிய கற்கால மக்கள் வாழ்ந்த குகை ஒன்றைக் கண்டறிந்தோம்.  ‘தம்பிரான்’ என்றால் தலைவன், இறைவன் என்று பொருள்படும். இக்குகையானது ஏறக்குறைய 10 பேர் வாழ ஏற்றதாக உள்ளது. இக்குகையின் ஒருபுறம் மூன்று சுனைகள் காணப்படுகின்றன. அவற்றில் கோடைக் காலங்களிலும் வற்றாமல் தண்ணீர் தேங்கி இருக்கிறது. குகையின் உட்புறத்தில் வெள்ளை நிற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மொத்தமாக ஐந்து ஓவியங்கள் இக்குகையின் மேற்புறத்தில் வரையப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று ஓவியங்கள் அழியாமல் முழுமையாக உள்ளன.

அவற்றில் ஒன்று இருப்பிடத்தைக் குறிப்பதாகவோ அல்லது அக்கால மக்கள் பயன்படுத்திய விளக்கினைக் குறிப்பதாகவோ இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. அதனருகில் பிறைக்குறியீடு வரையப்பட்டுள்ளது.  இவற்றை அடுத்துள்ள இரண்டு ஓவியங்கள் கட்டங்களாக வரையப்பட்டுள்ளன. ‘ஸ்வஸ்திக்’ குறியீடு போல உள்ள இவை சிதைந்த நிலையில் உள்ளன. இவற்றை அடுத்து வட்ட வடிவில் ஒரு ஓவியம் வரையபட்டுள்ளது. இது நிலவையோ, சூரியனையோ குறிப்பதாகக் கொள்ளலாம். இதனையடுத்து ஒரு மனித உருவம் வலது கையில் வில்லும் இடது கையில் அம்பும் ஏந்திய நிலையில் வரையப்பட்டுள்ளது. இது வேட்டை நிகழ்வை வெளிப்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ளது. நடுகற்களில் வில்லும், அம்பும் ஏந்தியவாறு வடிக்கப்பட்டுள்ள வீரனின் உருவம் போல இந்த ஓவியம் இருப்பது சிறப்புக்குரியதாகும்.

மேலும் செல்லியம்மன் கோயிலுக்கு பின்புறம் உள்ள ‘குகைக்குன்று’ என்ற சிறிய குன்றில் 6க்கும் மேற்பட்ட இயற்கையான குகைகள் காணப்படுகின்றன. இக்குகைகளையும் அக்கால மக்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதற்கு சான்றாக குகை முகப்பில் வெள்ளை நிறத்தில் பறவை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது. வேட்டை சமூகமாக காடுகளில் வாழ்ந்த அக்கால மக்கள் வேட்டை பொருட்கள் மிகுதியாகக் கிடைக்கும் இடத்தினை அடையாளப்படுத்தும் நோக்கில் அங்கு ஓவியங்களாக வரையும் பழக்கத்தினைக் கொண்டிருந்தனர். இக்குகையில் காணப்படும் பறவை அவ்வகையில் வரையப்பட்டதாகத் தெரிகிறது. செல்லியம்மன் கொட்டாய் என்ற இடத்தில் கண்டறியப்பட்ட இந்த ஓவியங்கள் புதிதாகக் கண்டறியப்பட்டவை என்பதை மூத்த தொல்லியல் ஆய்வறிஞரும் பேராசிரியருமான கா.ராஜன் உறுதி செய்தார்.

தொன்மையான ஓவியங்கள் உலகின் பல பகுதிகளில் இயற்கையாய் அமைந்துள்ள குகை மற்றும் பாறை ஒதுக்குகளில் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாறை ஓவியங்களில் அதிகளவில் வெள்ளை நிறமும் அதற்கு அடுத்த நிலையில் சிவப்பு நிறமும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொன்மையான ஓவியங்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன. இருப்பினும் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. தமிழகத்தின் வட பகுதிகளில் நிறைய பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்ட போதும், திருப்பத்தூர் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட பின்னர் இம்மாவட்டத்தில் கண்டறியப்படும் முதல் பாறை ஓவியம் இதுவாகும். இம்மாவட்ட எல்லைகளுக்குள் உள்ள சில பாறை ஓவியங்களில் இதுவும் ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More