×

குன்னூர் பஸ் நிலையம் பேக்கரி எதிரே நோ பார்க்கிங் போர்டு அகற்றியதால் கடும் போக்குவரத்து நெரிசல்

குன்னூர்: குன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்த நோ பார்க்கிங் பேரிகார்டு அகற்றப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் நகரின் முக்கிய சாலையாக மவுண்ட்ரோடு, டி.டி.கே சாலை, கோத்தகிரி செல்லும் சாலை உள்ளன. இந்நிலையில் குன்னூர் பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தாங்கள் திருப்பி செல்லும்போது அதிகளவிலான டீ தூள் மற்றும் வாசனை பொருட்கள், பேக்கரி பொருட்களை குன்னூர் பகுதியில் உள்ள தனியார் பேக்கரியில் வாங்கி செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் வாகனங்கள் பேக்கரி எதிரே நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதனை கருத்தில் கொண்டு பேருந்து நிலையம் அருகே உள்ள பேக்கரி கடை எதிரே நோ பார்க்கிங் போர்டுடன் பேரிகார்டு அமைக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை குன்னூர் பகுதியில் வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்சென்றனர். தற்போது காவல்துறையினர் பேருந்து நிலையம் அருகே உள்ள பேக்கரி எதிரே அமைக்கப்பட்டிருந்த நோ பார்க்கிங் போர்டை அகற்றியுள்ளதால் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கோத்தகிரி செல்லும் பேருந்துகள் நிறுத்தம் அங்குள்ளதால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பேக்கரி போன்ற வணிக வளாகங்கள் எதிரே சாலையில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும். அகற்றப்பட்ட நோ பார்க்கிங் போர்டினை மீண்டும் அதே பகுதியில் வைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். காவல்துறையினர் இலவசமாக வர்க்கி, பிஸ்கட் உள்ளிட்டவற்றை வாங்கிக்கொண்டு பேக்கரி உரிமையாளர்களுக்கு உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gunnar Bus Station , Heavy traffic congestion due to removal of no parking board in front of Coonoor bus stand bakery
× RELATED பெரம்பலூர் அருகே டூ வீலர் மீது வாகனம் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி