திருமூர்த்தி அணையில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள்

உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்தி மலை மீது அமணலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அதற்கு மேல் பஞ்சலிங்க அருவியும், கோயிலின் அருகே பாலாறும், மலையடிவாரத்தில் திருமூர்த்தி அணையும் அமைந்துள்ளது. அணைக்கு செல்லும் வழியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் பூங்கா மற்றும் நீச்சல் குளம் உள்ளது. வாரவிடுமுறை தினங்களிலும், அரசு விடுமுறை தினங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் இங்கு சுற்றுலா வருவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அத்துமீறி அணைக்குள் இறங்கி குளிக்கும்போது அணையில் உள்ள சகதியில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் தொடர்ந்து அரங்கேறி வந்தது.

ஆண்டுதோறும்  திருமூர்த்தி அணையில் மூழ்கி உயிரிழக்கும் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து அணையை சுற்றிலும் கம்பி வேலி அமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அணையின் கரைகளில் ஆங்காங்கே ஆபத்தான பகுதிகளை அடையாள மிட்டு  குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதி என குறிப்பிட்டு எச்சரிக்கை பலகைகளும் வைத்தனர். அணையின் கரையோரம் வசிக்கும் உள்ளூர்வாசிகள் பாதுகாப்பான பகுதியில் துணி துவைப்பது, குளிப்பதை காணும் வெளியூர் வாசிகள் அணையின் ஆழம் தெரியாமல் குளிப்பதற்கு இறங்குவதால் உயிரிழப்பு அதிகரிக்க துவங்கியது.

இதை தடுக்க வேண்டும் என  சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாக விடுமுறை தினங்களில் அணையின் கரைப்பகுதியில் ரோந்து வரும் போலீசார் அணைக்குள் சுற்றுலா பயணிகள் இறங்காதபடி பார்த்து கொண்டனர். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொது முடக்க அறிவிக்கப்பட்டதோடு, சுற்றுலா தலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்து திருமூர்த்தி மலை வெறிச்சோடியது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டுள்ள நிலையில் சிலர் ஆர்வக்கோளாறு காரணமாக கம்பிவேலியை அகற்றி அணைக்குள் இறங்கி குளிக்கின்றனர். கடந்த  2 தினங்களுக்கு முன் பழனியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அணைக்குள் இறங்கி குளித்தபோது சேற்றில் சிக்கி உயிரிழந்தார். தொடர்ந்து உயிர்பலியை தடுக்க வேண்டும் என்றால் சிதைந்த கம்பிவேலியை சீரமைப்பதோடு, அணைக்குள் இறங்கி குளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>